சரப்ஜித்சிங்கின் உடைமைகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.27 - பாகிஸ்தான் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங்கின் 36 உடைமைகளை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. பாகிஸ்தானில் உள்ள கோட் லக்பத் சிறையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சக கைதிகளால் அங்கு அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித்சிங் கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவரை சிறை பாதுகாவலர்கள்  மீட்டு லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மே 2-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து இந்திய தூதரக உயர் அதிகாரிகள் கூறியதாவது: சரப்ஜித் உயிரிழந்ததை அடுத்து அவரது உடைமைகளை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அவரது குடும்பத்தினர் சார்பில் பாகிஸ்தான் அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டது. அதை ஏற்று கோட் லக்பத் சிறை அதிகாரிகள் சரப்ஜித் உடைமைகளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தனர். அதில் சரப்ஜித் வைத்திருந்த புனித குரான் புத்தகம், ஜெபமாலை, இந்தியில் எழுதப்பட்டிருந்த 3 புனித நூல்கள், 5 ஜோடி உடைகள், சால்வை, காலணிகள் ஆகியவை உள்பட 36 பொருட்கள் இருந்தன. அந்த பொருட்களை பாகிஸ்தானில் இருந்து மீட்டு தருமாறு சரப்ஜித் சகோதரி தல்பீர் கவுர், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தூரகத்தின் மூலம் பாகிஸ்தான் அரசை அணுகி, சரப்ஜித் உடைமைகளை ஒப்படைக்க கோரிக்கை விடப்பட்டது. அதன்பின், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய தூதரகத்தில் சரப்ஜித் உடைமைகளை ஒப்படைத்தனர். அவற்றை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவை இந்தியா கொண்டு வரப்பட்டதும், அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர் கடந்த 1990-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சதி செய்ததாக கூறி சரப்ஜித் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்ததாக  அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ