முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த ராணுவ குவிப்பை மீறி மாவீரர் நாள் கடைபிடிப்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

யாழ்ப்பாணம், நவ.29 - தனி ஈழம் நாட்டை உருவாக்கப் போரடிய விடுதலைப் புலிகள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் தினமாக கடைபிடிப்பது வழக்கம். போர்க்களத்தில் உயிரை துச்சமென நினைத்து வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவீரர் தினத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடைபிடிக்கிறார்கள்.இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட பிறகு மாவீரர் தினம் அனுஷ்டிப் பதை தடுத்து விட வேண்டும் என்று சிங்களராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு வடக்கு மாகாணப் பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் சிங்கள ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவத்தினர் நேற்று முன்தினம் மாலைகடும் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். யாரும் தீபம் ஏற்றி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த கூடாது என்று மிரட்டல் விடுத்தனர். ராணுவத்தினர் பல வழிகளில் நெருக்கடி கொடுத்தப் போதிலும் ஈழத்தமிழர்கள் கொஞ்சமும் பயப்படவில்லை. தமிழக் கனவுடன், நம் மண்ணின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீரமரணம் அடைந்த போராளிகளின் படம் வைத்து, மாலைகள் அணிவித்து, தீபம் ஏற்றி தமிழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் வீடுகளில் மாவீரர்நாள் அஞ்சலியை செலுத்தினார்கள்.  யாழப்பாணத்தில் ஜப்பான் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆஸ்பத்திரியில் மேல் தளத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு தீபம் எரிவதை கண்ட சிங்கள ராணுவத்தினர் அந்த கட்டித்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர். இதற்கிடையே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு ஸ்தூபிக்கு மாணவர்கள் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து பல்கலைக்கழகம் உள்ளே இருக்கும் சிவன் கோவிலில் ஆசிரியர்கள் மவுன பிரார்த்தனை செய்தனர். யாழ்ப்பாணத்தில் இதுவரை  இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு  மிகவும் எழுச்சியுடன் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.மக்கள் மன உணர்வோடு இரண்டற கலந்து விட்ட இந்த அஞ்சலி நிகழ்வை கண்டு சிங்கள ராணுவ வீரர்கள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர்கள் தங்கள் கண்ணில் பட்ட ஈழத்தமிழ் வாலிபர்களிடம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா என்று கேட்டு தாக்கினார்கள். இதனால் யாழ்ப்பா ணம் முழுவதும் நேற்றுமுன்தினம் பதற்றம் நிலவியது. இலங்கையில் மட்டுமின்றி ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா உள்பட பலநாடுகளிலும் மாவீரர் தினத்தை தமிழர்கள் கடைபிடத்தனர். பல நாடுகளில் இந்த அஞ்சலி நிகழ்வில்  பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஈழதமிழ் அகதிகள் முகாமில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் நடந்த இந்த நிகழ்வுகளை கண்டு ராஜபக்சேயின் அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்