இலங்கை உள்நாட்டு போரில் பாதித்த பகுதிகளில் ஐ.நா.ஆய்வு

UN-logo

 

யாழ்ப்பாணம், டிச.4 - இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை பிரிவு நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது 3 லட்சம் பேர் தங்களது வீடு, வாசல்களை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பல ஆண்டுகளாக நடைபெற்ற போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் நடை பெற்ற காமன்வெல்த் மாநாட்டின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து அவரிடம் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தின. ஆனால், இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து உள்நாட்டு உயர் மட்ட குழு விசாரணை நடத்தும் என்று அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்நிலையில், இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகளுக்கான சிறப்பு பார்வையாளர் சலோகா பியானி நேற்று முன் தினம் இலங்கை வந்தடைந்தார். இலங்கை போரின் போது பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லை தீவு உள்ளிட்ட வடக்கு மாகாண பகுதிகளில் 5 நாட்கள் அவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து சலோகா பியானி கூறுகையில், இந்த ஆய்வின் போது போரால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து தகவல் திரட்ட உள்ளேன். போரால் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளவர்களின் நிலைமைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வை முடித்து கொண்டு ஜூன் மாதம் ஐ.நா. சபையில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ