இங்கிலாந்து சுற்றுலா பயணி மும்பை தாஜ் ஒட்டல் மீது வழக்கு

Image Unavailable

 

லண்டன், டிச.4 - மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பாதிக்கப்பட்ட இங்கிலாந்து சுற்றுலா பயணி, நஷ்ட ஈடு கேட்டு தாஜ் ஒட்டலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை லண்டன் உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த  2008 நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக படகில் மும்பைக்குள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர், மும்பை ரயில் நிலையம். பிரபல தாஜ் ஒட்டல்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 164 பேர் பலியாயினர். முன்னூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி கசாப் தூக்கிலிடப்பட்டார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, தாஜ் ஒட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலரும் பலியாயினர். சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் இங்கிலாந்தை சேர்ந்த வில் பைக் . இப்போது அவருக்கு வயது (33). லண்டனில் வசிக்கும் வில் பைக், தீவிரவாதிகள் தாக்குதலின் போது தனது காதலியுடன் தாஜ் ஒட்டலில் தங்கியிருந்தார். தாக்குதலில் படுகாயம் அடைந்து நடக்க முடியாமல் ஊனமடைந்துள்ளார். தற்போது வீல் சேரில்தான் நடமாடுகிறார். இந்நிலையில், நஷ்டஈடு கேட்டு தாஜ் ஒட்டல் அதிபர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வில் பைக் சார்பில் அவரது வக்கீல் பிலிப் ஹார்வர்ஸ் கூறுகையில், தாஜ் ஒட்டல் அதிபர்களிடம் நஷ்டஈடு கேட்டு வில் பைக் சாதாரணமாக வழக்கு தொடரவில்லை. மிக கவனமாக யோசித்து வழக்கு தொடுத்துள்ளார். என்றார். இதுகுறித்து வில் பைக் கூறியதாவது  தாஜ் ஒட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு தங்கியவர்களுக்கு சரியான பாதுகாப்பு அப்போது இல்லை. ஒரே ஒரு மெட்டல் டிடெக்டர் இருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய  போது, எமெர்ஜென்சி வழி எங்கிருக்கிறது. ஒட்டலை விட்டு எந்த வழியாக தப்பி செல்வது போன்ற எந்த தகவலையும் ஒட்டல் நிர்வாகத்தினர் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கை மும்பையில் நடத்தினால் விரைவாக  நிவாரணம் கிடைக்காது என்பதற்காகத்தான் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். தாஜ் ஒட்டலில் பாதுகாப்பு குளறுபடிகளால் நான் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளேன். இனி காலம் முழுவதும் என்னை பராமரித்து கொள்ள நான் ஏன் செலவு செய்ய வேண்டும். அதற்காகத்தான் நஷ்ட ஈடு கேட்டு தாஜ் ஒட்டல் அதிபர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். நஷ்ட ஈடு கிடைத்தால் என்னுடைய சிகிச்சைக்கும், தாஜ் ஒட்டலில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலவு செய்வேன். இவ்வாறு வில் பைக் கூறினார். இந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. 3 நாள் விசாரணை நடத்தப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து சுற்றுலா பயணி வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ