முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு எப்போது?

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 19 - தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏறக்குறைய 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது வேகவேகமாக நடைபெற்றுவருகிறது. இந்த பணிகள் இன்னும் முடிவடைவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆவலாக உள்ள நிலையில் முடிவுகள் வெளியாவதற்கு 2 தினங்கள் முன்னதாக தகவல் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 57 ஆயிரத்து 456 பேர் 10​ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதினர். 10​ம் வகுப்பு மெட்ரிக்குலேசன், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்து இருக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி அனைத்து கல்வி மாவட்டங்களிலும் முழுவீச்சில் வேகமாக நடந்து வருகின்றன. 10​ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதலில் மே 25​ந் தேதி வெளியாகும் என்று கல்வித்துறை செயலாளராக இருந்த சவிதா அறிவித்தார். பின்னர் அந்த தேதியை மாற்றி வேறு தேதியில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி துறை முன்னாள் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு புதிதாக பதவியேற்றுள்ளது. பள்ளிக் கல்வித்துறை  அமைச்சராக சி.வி.சண்முகம் பொறுப்பேற்றுள்ளார். இவர் நேற்று எழும்பூரில் உள்ள பள்ளிக்கல்வித்துறை, பாடநூல் கழகத்துறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் 10​ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:​ 10​ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. மதிப்பெண் பதிவு செய்யும் பணி ஒருபுறம் நடைபெறுகிறது. இந்த பணிகள் இன்னும் முடியாததால் ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என்பதை உறுதிபடுத்த இயலாது. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார். 

பின்னர் சமச்சீர் கல்வி புத்தகங்கள் அச்சடிப்பது தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜீவரத்தினம் மற்றும் அதிகாரிகளோடு இதுதொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இதுகுறித்து கூறுகையில், சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒருசில பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்கள் குறித்து வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, தரமான பாடங்களாக வழங்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்