முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரிட்சை

புதன்கிழமை, 4 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், டிச. 5  - இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டிவில்லியர்ஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டித் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடர் ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. 

இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்றது கிடையாது. எனவே இந்தத் தொடர் கேப்டன் தோனிக்கு சவாலானதாகும். 

ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி தற்போது பலமாக உள்ளது. அணியில் ஷிகார் தவான், ரோகித் சர்மா மற்றும் விராட்கோக்லி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். 

சர்வதேச அளவில் அதிக ரன் குவிப்பில் மேற்படி 3 வீரர்களும் டாப் 4 ல் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தவிர, இந்திய அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய சிறந்த வீரர்களும் இடம் பெற்று உள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் ஒரு நாள் தொடரை இழந்தது. இதனால் அந்த அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்ட தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான தொடரில் முழுத் திறனுடன் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டிவில்லியர்ஸ், ஆம்லா, டுமினி, குயின்டன்,  போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டெயின், பிளாண்டர், மார்கெல் மற்றும் சாட்சோபே ஆகிய சிறந்த பௌலர்களும் இடம் பெற்று உள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா அணி சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு பலமாகும். இந்திய வீரர்கள் தெ.ஆ.வின் சவாலை சமாளிக்க தயாராக உள்ளனர். 

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை 3 முறை ஒரு நாள் தொடரை இழந்தது. கடைசியாக 2010_ 11_ ம் ஆண்டு 2_3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 

இரு அணிகளுமே சமபலம் பொருந்தியவை என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இந்திய அணி : _ தோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, மொகித் சர்மா, அம்பாதி ராயுடு ஆகியோர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்