முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா காலமானார்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க்,டிச.7 - தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் கறுப்பர் இன தலைவருமான நெல்சன் மண்டேலா நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி இந்தியாவில் 5 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாக நுரையீரல் தொற்றுநோய் காரணமாக ஜோகன்ஸ்பர்க் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. நேற்று காலை 7 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 95. மண்டேலா மரண செய்தியை தென்னாப்பிரிக்க அதிபர் அரசு டி.வி.யில் முறைப்படி அறிவித்தார். அப்போது அவர் நமது நாடு தலைமகனை இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று வருத்தத்துடன் கூறினார். மண்டேலா மரண செய்தியை கேட்டதும் தென்னாப்பிரிக்க மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். ஜோகன்ஸ்பர்க் நகரில் மண்டேலா வீட்டுக்கு வெளியே மக்கள் திரளாக குவிந்த வண்ணம் உள்ளனர். கண்ணீர்விட்டு கதறி அழுத அவர்கள் கையில் தென்னாப்பிரிக்க தேசிய கொடிகள் இருந்தன. கறுப்பு சட்டைகளை அணிந்திருந்த மக்கள் கோஷங்களையும் எழுப்பினார்கள். நெல்சன் மண்டேலா கடந்த 1918_ம் ஆண்டு ஈஸ்டர்ன் கேட் நகரில் பிறந்தார். 1943_ம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தார். தென்னாப்பிரிக்காவில் மைனாரிட்டியாக வாழ்ந்த வெள்ளையர்கள் மெஜாரிட்டியாக இருந்த கறுப்பர் இனத்தவரை கொத்தடிமைகள் போல் நடத்தினர். இதை மண்டேலா கடுமையாக எதிர்த்தார். கறுப்பர்களுக்கும் சம உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதனால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 4 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்,வழக்கு விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலையானார். அதன் பிறகும் மக்களுக்காக போராடினார். 1962_ம் ஆண்டில் மீண்டும் கைதான அவர் தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளை சிறையிலேயே கழிக்க நேர்ந்தது. உலக நாடுகளின் எதிர்ப்பால் 1990_ம் ஆண்டு தென்னாப்பிரிக்க குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. நெல்சன் மண்டேலாவும் சிறையில் இருந்து விடுதலயானார். அதுவரை வெள்ளையர்கள் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டம் நீக்கப்பட்டு கறுப்பர் இன தலைவரும் அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டது. 1994_ல் நடந்த அதிபர் தேர்தலில் மண்டேலா போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பர் இனத்தின் முதல் அதிபர் என்ற மகத்தான பெருமை பெற்றார். முதுமை காரணமாக 1999_ம் ஆண்டு அவர் பதவி விலகினார். 2001_ல் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் 2004_ல் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். மக்கள் தலைவரான மண்டேலாவுக்கு 1990_ம் ஆண்டு இந்தியா அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. 1993_ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இவரை மக்கள் மடியா என அன்போடு அழைத்தனர். நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி விருதையும் அவர் பெற்றார். மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18_ம் தேதியை சர்வதேச மண்டேலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவரது மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டீஷ் பிரதமர் கேமரூன், ஐ.நா. பொதுச்செயலாளர் பாங் கீ மூன் உள்பட உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவையொட்டி இந்தியாவில் 5 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago