முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான பந்து வீச்சே தோல்விக்கு காரணம்: தோனி

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், டிச. 7 - தென் ஆப்பிரிக்காவுக்கு  எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்து வீச்சே காரணம் என்று கேப்டன் தோனி தெரிவித்தார். 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று முன் தினம் நடந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 358 ரன் குவித்தது. தொடக்க வீரர் டி காக் சதம் (135 ரன்) அடித்தார். 

தவிர, கேப்டன் டிவில்லியர்ஸ் 77 ரன்னும், டுமினி 59 ரன்னும் அம்லா 65 ரன்னும் எடுத்தனர். கடைசி 10 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 135 ரன் எடுத்தது. 

359 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ரன் எடுக்க திணறியது. 

ஷிகார் தவான் 12 ரன்னிலும், விராட் கோக்லி 31 ரன்னிலும், யுவராஜ் சிங் பூஜ்யத்திலும், அடுத்தடுத்து அவுட் ஆகினர். ரோகித் சர்மா 18 ரன்னிலும், ரெய்னா 14 ரன்னிலும் ரன் அவுட் ஆனார்கள். 

கேப்டன் தோனி மட்டுமே தாக்குப் பிடித்தார். அவர் 65 ரன் எடுத்தார். இந்திய அணி 41 ஓவரில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தெ. ஆ. அணி 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. 

இந்தப் போட்டி குறித்து கேப்டன் தோனி தெரிவித்ததாவது _ புதிய பந்தில் பௌலர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. 

நாங்கள் பந்து வீச்சை சிறப்பாக தொடங்கவில்லை. மொகமது ஷமி நன்றாக வீசிய போதிலும் மற்ற பௌலர்கள் அதை செய்ய தவறிவிட்டனர். 

எங்களது பந்து வீச்சாளர்களிடம் இன்னும் அதிகவேகம் தேவை என நினைக்கிறேன். கடைசி கட்ட பந்து வீச்சும் கட்டுக் கோப்பாக இல்லை. 

இதனால் பந்து வீச்சு மோசமாக இருந்தது. எதிரணி 350 ரன்னுக்கு மேல் எடுத்தால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும். 

போட்டிக்காக சிறப்பாக தயாராகி இருந்தோம். ஆனால் அதை மைதானத்தில் செயல்படுத்த வேண்டும். அடுத்த போட்டிகளில் நன்றாக விளையாடுவோம் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் நடந்த போட்டிகளில் இந்திய அணி 9 முறை 350 ரன்னுக்கு மேல் கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்