முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி: அ.தி.மு.க. எதிர்ப்பு

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.10 - இலங்கை கடற்படையனருக்கு இந்தியா பயிற்சி அளிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது. 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 5_ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று மறைந்த உறுப்பினர்களுக்கு சபையில் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்திய பிறகு இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார். மறுநாள் சபை கூடியதும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வார விடுமுறைக்கு பிறகு நேற்று இரு சபைகளும் மீண்டும் கூடின. அப்போது இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பது தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கும் மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரிக்கும் அ.தி.மு.க.வினர் ஏற்கனவே நோட்டீசு கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றுக்காலையில் பாராளுமன்றம் கூடியபோது அது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் லோக்சபையில் கோரிக்கைவிடுத்து கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் சபையில் சிறிதுநேரம் அமளி ஏற்பட்டதையடுத்து சபை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் சபை கூடியபோது தெலுங்கானா பிரச்சினையை அந்த மாநில எம்.பி.க்கள் எழுப்பினார்கள். இதனால் சபையில் மீண்டும் அமளி, துமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் மீராகுமார் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதேபோல் மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினைகள் எதிரொலித்தன. அவை கூடியதும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி கோஷம் எழுப்பினார்கள். தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமாநில எம்.பி.க்களும் கோஷம் எழுப்பினார்கள். இந்த அமளியால் சபையை முதலில் 12 மணி வரையிலும் பிறகு நாள் முழுவதும் ஒத்திவைத்தார் சபை தலைவர் ஹமீத் அன்சாரி. இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிக்கக்கூடாது என்று கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார். இதே பிரச்சினையை அ.தி.மு.க. எம்.பி.க்களும் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்