முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 9வது வெற்றி

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.20 - சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வென்றது. இந்த வெற்றி சென்னை அணிக்கு கிடைத்துள்ள 9வது வெற்றியாகும்.

சென்னையில் சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. முதலில் விளையாடிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. விர்த்திமான் சஹா 33 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) மைக்ஹஸ்சி 32 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய கொச்சி அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்னே எடுக்க முடிந்தது. ஹோட்ஜே 42 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்குல்லம் 33 ரன்னும் எடுத்தனர். அஸ்வின், போலிஞ்சர், ஜகாதி, பிராவோ தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இந்த வெற்றி சென்னை சூப்பர்கிங்ஸ் பெற்ற 9​வது வெற்றியாகும். இதன்மூலம் 18 புள்ளிகளை பெற்று சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சூப்பர்கிங்ஸ் தொடர்ந்து பெற்ற 7​வது வெற்றியாகும். ஏற்கனவே கொல்கத்தா, பெங்களூர், டெக்கான், புனே, ராஜஸ்தான், டெல்லி அணிகளை இங்கு வென்று இருந்தது.

கொச்சி அணி 8​வது தோல்வியை தழுவி வெளியேறியது. 

சென்னை ஆட்டத்தில் பெற்ற 9வது வெற்றி குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் தோனி கூறியதாவது:​ 

சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளோம். இது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகும். இந்த ஆட்டங்கள் அனைத்திலும் நாங்கள் எளிதாக வெற்றி பெற்றதாக கருத வேண்டாம். சில ஆட்டங்களில் கடுமையாக போராடித்தான் வென்றோம். அடுத்த சுற்றில் மிகப்பெரிய ஆட்டத்துக்கு நாங்கள் தயாராகி விட்டோம். எங்களது பந்துவீச்சு, பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது.

இவ்வாறு தோனி கூறினார். 

ஆட்டநாயகன் விருது பெற்ற விர்த்திமான் சகா கூறும்போது எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். எந்தவித நெருக்கடியும், பதட்டமும் இல்லாமல் நான் விளையாடினேன் என்றார்.

தோல்வி குறித்து கொச்சி அணி கேப்டன் பார்த்திவ் படேல் கூறியதாவது:​ ஷேவாக், தோனி போன்ற அதிரடியான வீரர் என்று என்னை நான் சொல்லவில்லை. எனது முழு திறமையை வெளிப்படுத்தினேன். 153 ரன் என்பது எளிதான இலக்குதான். 15 ஓவருக்கு பிறகும் எங்களது ஆட்டத்தில் அதிரடி இல்லை. இதனால் தோற்றோம். சென்னை சூப்பர்கிங்சை 152 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். ஆர்.பி.சிங் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

இவ்வாறு பார்த்திவ் படேல் கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வருகிற 24​ந் தேதி எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்