முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபையில் லோக்பால் ஒரு மனதாக நிறைவேறியது

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.18 - ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா மீதான விவாதம் பாராளுமன்ற ராஜ்யசபையில் நேற்று பிற்பகல் தொடங்கி காரசாகமாக நடந்தது. இந்த மசோதாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி வெளிநடப்பு செய்தது. இருப்பினும் இந்த மசோதா ராஜ்யசபையில் விவாதத்திற்கு பிறகு ஏகமனதாக நிறைவேறியது. 

நாட்டில் ஊழல் அதிகரித்து விட்டதால் பிரதமர் மற்றும் நீதிபதிகளாக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டால் அவர்களையும் தண்டிக்க வகை செய்யும் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10_ம் தேதி முதல் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தி கிராமத்தில் நேற்றும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். மேலும் லோக்பால் சட்டம் கொண்டுவர முயற்சிக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பா.ஜ.க. மூத்த தலைவர் அருண்ஜெட்லி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஹசாரே கடிதம் அனுப்பினார். அதற்கு நன்றி தெரிவித்து ராகுலும் நேற்று பதில் கடிதம் அனுப்பினார். பிறகு மத்திய அமைச்சர்கள் கமல்நாத், நாராயாணசாமி ஆகியோரை தனது இல்லத்திற்கு வரவழைத்து லோக்பால் மசோதா குறித்து நேற்றுக்காலையில் ராகுல் ஆலோசனை நடத்தினார். முன்னதாக நாடாளுமன்ற குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் எதிர்க்கட்சியினர் அளித்த பரிந்துரைகளை சிலவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு கடந்த 2011_ம் ஆண்டு டிசம்பர் மாதம் லோக்சபையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த மசோதா ராஜ்யசபையில் இன்னமும் நிறைவேறவில்லை. இந்த மசோதா நிறைவேறினால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அது பயன்படுத்தப்படலாம் என்று கூறி சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நேற்றுக்காலை ராஜ்யசபை வழக்கம்போல் கூடியது. அப்போது சபை தலைவரை பேசவிடாமல் தெலுங்கானா பிரச்சினையை எழுப்பி சீமாந்தரா பகுதி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை பிற்பகல் வரை ஒத்திவைத்தார் சபை தலைவர் ஹமீத் அன்சாரி. பிறகு மீண்டும் அவை கூடியதும் லோக்பால் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி எம்.பி.ராம்கோபால் யாதவ் பேசினார். பின்னர் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் கபில்சிபல் பேசுகையில் இந்திய வரலாற்றில் இதற்கு முன் ஒரு மசோதா மீது இவ்வளவு விரிவாக விவாதம் நடந்ததில்லை என்றார். பா.ஜ.க. ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசுகையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. அதேநேரம் எல்லாம் மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாக்களை கொண்டுவர வேண்டும் என்றார். தொடர்ந்து மசோதா மீது காரசார விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பிறகு லோக்பால் மசோதா ஏகமனதாக நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்த அனைத்துக்கட்சியினர்களுக்கும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த விஷயத்தில் சமாஜ்வாடி கட்சியை சமாதானப்படுத்த மத்திய காங்கிரஸ் அரசு முயன்று வருகிறது. காரணம், இந்த கூட்டத்தொடருக்குள் இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக லோக்சபையில் இந்த மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர் பதவியை கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்தார். அப்படி செய்தால் போட்டி அரசாங்கம் உருவாகிவிடும் என்று அவர் எச்சரித்தார். மேலும் முதலமைச்சர் பதவிக்கும் அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மைத்ரேயன் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே ராஜ்யசபையில் ஒரு கட்டத்தில் கருத்துமோதலும் ஏற்பட்டது. நேற்று நடந்த விவாதத்தில் அருண்ஜெட்லி, சீதாராம் யெச்சூரி உள்பட சர்வகட்சி தலைவர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். 

முன்னதாக நேற்று லோக்சபை நேற்றுக்காலை கூடியபோது பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி கங்குலி மீது நடவடிக்கை எடுப்பது தெலுங்கானா பிரச்சினை உள்பட பல பிரச்சினைகளை எழுப்பி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியை அடுத்து லோக்சபை முதலில் நண்பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!