முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் மோசடி: முன்னாள் அமைச்சர்கள் ஊழல் அம்பலம்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

மும்பை, டிச. 22 - மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கொலாபா பகுதியில் 31 அடுக்குமாடிகளைக் கொண்ட ஆதர்ஷ் குடியிருப்பு உள்ளது. 

கார்கில் போரில் மரணம் அடைந்த ராணுவ அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்தவதற்காக மராட்டிய மாநில அரசு இந்த குடியிருப்பை ஏற்படுத்தியது. 

மொத்தம் 102 வீடுகள் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கட்டப்பட்டன. வீடுகளை ஒதுக்கீடு செய்தபோது மராட்டிய மாநில அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள். சில ராணுவ தளபதிகள் விதிகளை மீறி ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் செய்து வீடுகல் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

முதல் கட்ட விசாரணையில் வீடு ஒதுக்கீட்டில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரிந்தது. அது ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என்ற பெயரில் நாடெங்கும் பேசப்பட்டது. 

இதையடுத்து இந்த முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆதர்ஷ் ஊழலில் முக்கியப் பங்கு வகித்து இருப்பது தெரிய வந்தது. 

அந்த தகவல்களை சி.பி.ஐ. 690 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தொகுத்து கடந்த ஏப்ரல் மாதம் மராட்டிய மாநில அரசிடம் ஒப்படைத்தது. 

அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய  மாராட்டிய மாநில காங்கிரஸ் அரசு அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. ஆதர்ஷ் ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டியது. 

இதற்கிடையே இந்த விவகாரத்தில் குறுக்கிட்ட மும்பை ஐகோர்ட்டு, சி.பி.ஐ. கொடுத்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 

அதை ஏற்றுக் கொண்ட மராட்டிய மாநில முதல் அமைச்சர் பிருதிவிராஜ் சவான், காங்கிரசுக்கு ஏற்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்காக மிகவும் தந்திரமாக , சட்டசபை கூட்டத்தின் கடைசி நாளான நேற்று முன் தினம் அந்த அறிக்கையை தாக்கல் செய்தார். 

அப்போது பேசிய அவர் சி.பி.ஐ. யின் விசாரணை அறிக்கையை மாநில அரசு நிராகரிப்பதாக கூறினார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் சட்ட சபையில் சொல்லவில்லை. 

இதன் மூலம் ஊழல் செய்த காங்கிரஸ் அமைச்சர்களை காப்பாற்ற அவர் வெளிப்படையாக செயல்படுவது தெரிந்தது. இதை கண்டித்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

இந்த நிலையில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.பி.ஐ. அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மராட்டிய மாநில 4 முன்னாள் முதல் அமைச்சர்கள், 2 அமைச்சர்கள், 22 அரசு அதிகாரிகள், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அசோக்சவான், விலாஸ்ராவ் தேஷ் முக், சுசில் குமார் ஷிண்டே, சிவராஜ் ராவ் பாட்டீல் ஆகியோரே ஆதர்ஷ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 முன்னாள் முதல் அமைச்சர்கள் ஆவார்கள். இவர்களில் சுஷில் குமார் ஷிண்டே தற்போது உள்துறை அமைச்சராக இருக்கிறார். 

தவிர, ராஜேஷ் தோப், சுனில் தாக்கரே ஆகிய இரு அமைச்சர்களும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர்.   

4 முன்னாள் முதல் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அனைவரும் பினாமி பெயரில் வீடுகளை பெற்று இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த அறிக்கையில் உறுதிபடுத்தி உள்ளனர். 

ஊழலில் ஈடுபட்ட அசோக் சவான் தனக்கு மட்டுமின்றி தன் உறவினர்கள் 3 பேருக்கும், அந்த குடியிருப்பில் வீடுகளை முறைகேடாக பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 

4 முன்னாள் முதல் அமைச்சர்கள் மீதும் 22 அரசு உயர் அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. குற்றச்சாட்டை நிரூபித்துள்ள போதிலும், மாநில காங்கிரஸ் அரசு அதை நிராகரித்துள்ளது. 

இதை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள மராட்டிய மாநில பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். 

சி.பி.ஐ. அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை கோரி கோர்ட்டை அணுக சிவசேனாவும் முடிவு செய்துள்ளது. 

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானியும் மும்பை ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து வீட்டை பெற்று  இருப்பதாக சி.பி.ஐ. கொடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!