முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 மீனவர்களின் கதி?

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை, டிச. 29 - புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். 6  படகுகளையும் இழுத்துச் சென்றனர்.  

தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. 

இந்த பிரச்சினையில் முற்றுப் புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்தாலும் இலங்கை அரசு தனது அத்துமீறலை இன்னும் நிறுத்திக் கொள்ளவில்லை. 

இலங்கை சிறையில் வாடும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 227 பேரையும் அவர்களுக்கு சொந்தமான 77 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமரை வலியுறுத்தி  புதுக்கோட்டை ராமநாதபுரம் , நாகை மற்றும் காரைக்கால் மீனவர் சங்க பிரதிநிதிகள் டெல்லி சென்றனர். 

அவர்கள் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதன் பேரில் இந்திய _ இலங்கை மீனவர்கள் சென்னையில் வருகிற 20 _ம் தேதி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

அதற்குள் நேற்று மீண்டும் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப் பட்டினம் பகுதியைச் சேர்ந்த 500 _க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 

அவர்கள் அனைவரும் நேற்று காலை கரை திரும்ப வில்லை. இதற்கிடையே நள்ளிரவில் 6 படகுகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு அதிவேகமாக இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதில் இருந்த கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களின் 6 படகுகளையும் சுற்றி வளைத்தனர். 

பின்னர் மீனவர்களின் படகுகளில் தாவிய அவர்கள் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதோடு, பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் எடுத்துக் கொண்டனர். 

ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அஞ்சப்பர் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற சத்தியபிரியன், விஜயேந்திரன், சீராளன், கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த பார்க் கல் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ராயப்பன்(45), முருகேசன், சஞ்சீவி, சந்தானம், மரியகென்னடிக்கு சொந்தமான படகில் சென்ற சத்தியேந்திரன், நாகலிங்கம், ரெங்கசாமி, ராஜேந்திரன், புஷ்பராஜூக்கு சொந்தமான படகில் சென்ற நாகநாதன், நாகலிங்கம், முத்துகாமாட்சி, கருப்பையா, உள்பட 22 மீனவர்களையும் சிறை பிடித்த கடற்படையினர் அவர்களை படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்றனர். 

அங்குள்ள காங்கேசன் கடற்படை முகாமில் அடைத்து வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று பிற்பகலில் மீனவர் கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்கள். 

அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்களா ? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. 

ஏற்கனவே 30 _க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வரும் நிலையில் மீண்டும் 22 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்