முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் 5-வது டெஸ்ட்: இங்கி., அணி 155 ரன்னில் அவுட்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 5 - ஆஷஸ் தொடர் 5_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 155 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்கள் ஜான்சன், பீட்டர் சிடில் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களை திணற வைத்தனர். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் கடந்த 2 நாளாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. சுமித் சதம் (115) அடித்தார். 

பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் கூக் 7 ரன்னிலும், ஆண்டர்சன் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். 

நேற்று 2_வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட் டுகளை இழந்து திணறியது. 

அந்த அணி ஒரு கட்டத்தில் 125 ரன்னில் 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. பென் ஸ்டோக்ஸ் ஒருவர் மட்டும் சமாளித்து ஆடினார். அவர் 47 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

கடைசி கட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் _ ரன்கின் ஜோடி போராடியது. இறுதியில் இங்கிலாந்து அணி 155 ரன்னில் சுருண்டது. கடைசியாக ரன்கின் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். பிராட் 30 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், ஜான்சன், பீட்டர் சிடில் மற்றும் ஹாரிஸ் தலா 3 விக்கெட் எடுத்தனர். 171 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2_வது இன்னிங்சை விளையாடியது. 

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 4 டெஸ்டிலும் தோற்று ஏற்கனவே தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த டெஸ்டிலும் அந்த அணி தோல்வியைத் தழுவி ஒயிட் வாஷ் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது.  ஆஸி. அணி 5_ 0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்