தேவயானி இந்தியா திரும்புகிறார்

Image Unavailable

 

புது டெல்லி, ஜன.11 - விசா மோசடியில் சிக்கிய இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இந்தியாவுக்கு புறப்பட்டார். 

தேவயானி கோப்ரகடே இந்தியாவுக்கு புறப்பட்டார் என்ற தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும், அவர் இந்திய வெளியுறவுத் துறை தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விசா மோசடி வழக்கில் குற்றச் சாட்டு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படது. இந்த மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்தது. 

தேவயானி கோப்ரகடே மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசா மோசடி, நீதிபதியிடம் தவறான வாக்குமூலங்களை அளித்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர் பிரீத் பஹாரா தெரிவித்துள்ளார். 

தேவயானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவருக்கு தூதரக அதிகாரிக்கான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க முடியாது. 

விசா மோசடி வழக்கில் தேவயானி சிக்கிய பின்னர் அவரை ஐ.நா.வுக்கான நிரந்தர தூதர் பதவியில் அமர்த்தியது இந்தியா. இதனால் அவருக்கு கூடுதல் சலுகை கிடைத்தது. 

தேவயானிக்கு அளிக்கப்பட்டுள்ள தூதரக பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டது, ஆனால் இந்தியா அதற்கு மறுத்து விட்டது. இதனால், தேவயானி குற்றச்சாட்டு மட்டும் பதியப்பட்ட நிலையில் இந்தியா திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ