தேவயானி திரும்பி வந்தால் கைது செய்ய வாரண்ட்: அமெரிக்கா

Image Unavailable

 

வாஷிங்டன், ஜன.12 - இந்திய தூதரக அதிகாரி தேவயானிக்கு இனிமேல் சிறப்பு அந்தஸ்து கிடைக்காது. அவர் மீண்டும் அமெரிக்கா வந்தால் அவருக்கு எதிராக கைது வாரண்ட்  பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் இந்திய _ அமெரிக்க உறவில் சிக்கல் அதிகரித்துள்ளது. 

விசா மோசடி. வேலைக்கார பெண்ணை துன்புறுத்தியதுஆகிய குற்றச் சாட்டு களின் கீழ் இந்திய தூதரக அதிகாரி தேவயானியை அமெரிக்க போலீசார் ஒரு மாதத்துக்கு முன்னர் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற அமெரிக்கா மறுத்து விட்டது. 

மேலும் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேவயானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையில், ஐ.நா.வின் இந்திய பிரதிநிதியாக தேவயானியை மத்திய அரசு நியமித்தது. இதன் மூலம் அவருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளதால் வழக்கில் இருந்து தேவயானிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. 

அத்துடன் தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து தேவயானிக்கு டெல்லியில் பணி இட மாற்றம் செய்து இந்திய வெளியுறவு துறை ஆணை பிறப்பித்தது. 

குழந்தைகளை விட்டு தேவயானி மட்டும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு நேற்று முன் தினம் இரவு டெல்லி திரும்பினார். 

இந்நிலையில், தேவயானியை வெளியேற்றியதற்கு பதிலடியாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தேவயானிக்கு நிகரான பதவியில் உள்ள அதிகாரியை 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வெளியுறவு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த அதிகாரியின் பெயரை அரசு வெளியிட வில்லை. 

இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது _ அமெரிக்க தூதரக  அதிகாரியை வெளி யேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. வருத்தம் அளிக்கிறது. 

இந்தியா _ அமெரிக்கா இடையிலான உறவு ஒரு சவாலான தருணத்தை சந்திக்கும் நேரம். தேவயானிக்கு இனிமேல் சிறப்பு அந்தஸ்து எதுவும் கிடையாது. 

தேவயானி மீண்டும் அமெரிக்கா திரும்பினால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும். 

இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன்பு தேவயானியிடமும் இந்திய அரசிடமும் கூறிவிட்டோம். 

மேலும் விசா மற்றும் குடியேற்றத் துறைக்கும் தேவயானி பற்றி தகவல் அனுப்பி விட்டோம். இவ்வாறு ஜென் சகி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ