முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வி - புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மே.22 - மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான வீராம்பட்டினத்தை சேர்ந்த விசுவநாதன் எழுந்து, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக பணியாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். 

அவரை மத்திய அமைச்சர் நாராயணசாமி சமாதானப்படுத்தி அமர வைத்தார். 

இதன் பின்னர் கூட்டம் முடிந்து அனைவரும் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, விசுவநாதன் மீண்டும் காங்கிரஸ் தோல்விக்கு காரணமான காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதிதோறும் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார். 

அப்போது காங்கிரஸ் அலுவலகம் எதிரே நின்று கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தியை ஒரு கும்பல் திடீரென்று தாக்க முயன்றது. உடனே அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வம் அந்த கும்பலை தடுத்து நிறுத்தி விநாயகமூர்த்தியை அந்த இடத்தில் இருந்து மீட்டு சென்றார். 

இந்த சம்பவம் காரணமாக காங்கிரஸ் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காங்கிரசார் இடையே கோஷ்டி மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவானது. இதையடுத்து மத்திய அமைச்சர் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்