ஸ்பெக்ட்ரம் வழக்கு - குற்றப்பத்திரிக்கை அடுத்த மாதம் தாக்கல்

2G 6

புதுடெல்லி, மே.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் முதலாக கடந்த பிப்ரவரி மாதம் 2 ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு டி.பி. ரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா கைதானார். இதையடுத்து தனியார் தொலைத் தொடர்பு துறை நிறுவன உயரதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு பல்வா தம்பி, ஒரு இடைத் தரகர், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மொரானி ஆகியோர் கைதானார்கள். நேற்று முன்தினம் கனிமொழி, சரத்குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கரீம் மொரானியை தவிர மற்ற 13 பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 3 வது குற்றப் பத்திரிக்கையை சி.பி.ஐ. தயார் செய்து வருகிறது. அடுத்த மாதம் 2 வது வாரம் அல்லது மாத இறுதியில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லூப் டெலிகாம் மற்றும் எஸ்.ஆர். நிறுவனத்திடம் நடத்தப்பட்ட விசாரணை விபரங்கள் இடம்பெறும். லூப் டெலிகாம் முறைகேடாக 21 உரிமங்கள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 3 வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேலும் சில தனியார் தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ