ஜெயலலிதா பிறந்த நாள் - ஷேக் தாவூத் வாழ்த்து

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
Sheik-Dawood1

சென்னை, பிப்.24 - தமிழகத்தை சுயநல அரசியல்வாதிகளிடமிருந்தும், அவரது வாரிசுகளிடமிருந்தும் காப்பாற்ற 62 வருடங்களுக்கு முன் பிறந்த தெய்வ சக்தி ஜெயலலிதா என்று தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத் விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.  இன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின்  63-வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசியல் வானில் விடிவெள்ளியாய் முளைத்து ஏழை மக்களின் இன்னல்களையும், அவர்களின் எண்ணற்ற துயரங்களையும் தாயுள்ளத்தோடு போக்கி, என்றென்றும் தமிழக மக்களின் மனங்களில் அன்பு சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாளில் இஸ்லாமிய சமுதாயம் சார்பாக தென்னகத்து ஜான்சி ராணி ஜெயலலிதாவுக்கு எங்களின் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தமிழ் மாநில முஸ்லீம் லீக் பெரு உவகையுடன் உரித்தாக்குகிறது.
தமிழகத்தை தீய சக்திகள் கருமேகங்களாக சூழ்ந்து கொண்டு மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த வேளையில் ஜெயலலிதா மீண்டும் தமிழக அரியணையில் அமர்ந்து கொடுங்கோலர்களின் கொட்டத்தை ஒடுக்கி அவர்களை வதை செய்யும் வகையில் தமிழக ஆட்சியை மக்கள் தங்களின் பிறந்த நாள் பரிசாக தங்களுக்கு சமர்ப்பிப்பார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை. இந்தப் புனிதப் பணியில் இஸ்லாமிய சமுதாயம் உங்களுக்கு துணை நிற்கும் என்பதை உலகிற்கு பறை சாற்ற தமிழ் மாநில முஸ்லீம் லீக் எவ்வித தன்னலமுமின்றி பாடுபடும் என்று இந்த நன்னாளில் உறுதி கூறுகிறது. ஏழை எளிய மக்களின் ஆட்சியாக விளங்கிய தங்களின் பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
தமிழகத்தை சுயநல அரசியல்வாதிகளிடமிருந்தும், அவர்தம்  வாரிசுகளிடமிருந்தும் காப்பாற்ற  62 வருடங்களுக்கு முன் பிறந்த தெய்வ சக்தியான தாங்கள் 63 வது பிறந்த நாள் காணும் இந்த சுபவேளையில் ஜெயலலிதா நீண்ட ஆயுளோடும், எல்லா வள நலன்களோடும் வெகுகாலம் வாழ்ந்து தமிழகத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: