தி.மு.க. மெகா ஊழல் கூட்டணி - சி.என்.ராமமூர்த்தி அறிக்கை

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
No Image2 1

சென்னை, பிப்.24 - தி.மு.க. மெகா கூட்டணி அல்ல, மெகா ஊழல் கூட்டணி என்று வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி அறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தன் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக வன்னியர் சமுதாயத்தின் எதிர்காலத்தை கருணாநிதியின் காலடியில் அடகு வைத்து விட்டார் ராமதாஸ். அவருடைய மகனோ, கருணாநிதியை தரிசனம் செய்து விட்டு வந்து தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி என்கிறார். இது மெகா கூட்டணி அல்ல- மெகா ஊழல் கூட்டணி. இந்த ஊழல் கூட்டணியை முறியடித்து ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால்தான் வன்னியர் சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கும். ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்து விட்டார்.
இந்த கோரிக்கைக்காக போராடியவர்கள், எதிர்கட்சியினர் பலர் என்ற போதிலும், இந்திய அரசியல் அரங்கில் பணநாயகத்துக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி ஜனநாயகத்தை நிலை நிறுத்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆற்றியுள்ள அரும்பணி என்றென்றும் போற்றி நினைவு கூறத்தக்கதாகும்.
கடந்த மாதம் ராமதாசை கூட்டணியில் இணைத்துக் கொள்ள சோனியா விரும்பவில்லை என்று கூறிய கூட்டணி கொள்கையின் தத்துவ கர்த்தர் கருணாநிதி திடீரென 31 சீட் என்ற பகிரங்க தாலியை பா.ம.க.வின் கழுத்தில் கட்டி, தன் குடும்ப வளர்ச்சிக்காக வன்னிய சமுதாயத்தை பலிகடாவாக்கிய ராமதாசுடன் தனக்கிருந்த கள்ளத் தொடர்பை பிரகடனப்படுத்தி விட்டார். இந்த முடிவு அதலபாதாளத்தில் கிடந்து தவிக்கும் வன்னிய சமுதாயத்தை கைதூக்கி விட கருணாநிதி செய்த தியாகத்தை வெளிப்படுத்தவில்லை. நீ கலைஞர் டி.வி.யை ரெய்டு செய்தாய். அதனால் நீ யாரை சேர்க்க வேண்டாம் என்றாயோ... அவருக்கு முதல் போனியா 31 சீட் கொடுத்து இருக்கிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாயை வெறுப்பேற்ற கருணாநிதி செய்த ``அஜால்- குஜால்'' சூரத்தனம் என்பதை உணராமல் 31 வன்னியர்கள் தன் கைக்காசை கரியாக்கி தி.மு.க.வின் குழிபறிப்பு கூட்டணி தர்மத்தால் தங்கள் டெபாசிட்டை இழக்க உள்ளார்கள் என்பதை எண்ணி பார்க்கும்போது  வன்னியர்கள் இளித்தவாய் இனத்தவர்கள் என்பதை நிரூபிக்கும் காலம் வரத்தான் போகிறது.
எல்லா நிலைகளிலுமே அரசியல் நாணயத்தையும், தர்மத்தையும், சூது- ஊழல்- லஞ்சம் என்ற தீய சக்திகள் முழுமதியை விழுங்கிய கிரகணம் போல் கவ்விக் கொண்டுள்ள இவ்வேளையில், சூது கவ்விய தர்மத்தை வெல்ல வைக்கும் தூய சக்தியாம் ஜெயலலிதாவின் புனித புத்தாட்சி அமைய வன்னிய உறவுகளான நாம் இன்றே சபதம் ஏற்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு சி.என்.ராமமூர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: