முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியுடன் ஸ்டாலின் உருக்கமான சந்திப்பு

புதன்கிழமை, 25 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 25 - டெல்லியில் கனிமொழியை அவரது சகோதரர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த உருக்கமான சந்திப்பு டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்தது. ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அந்த கோர்ட்டில் ஆஜராவதற்காக கலைஞர் டி.வி.யின் பங்குதாரரும் எம்.பி.யுமான கனிமொழியும் கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் வந்திருந்தனர். அதே கோர்ட்டுக்கு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும் வந்திருந்தார். இவர்கள் வருவதற்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, மற்றும் இதர தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் இந்த கோர்ட்டு அமைந்துள்ள பாட்டியாலா இல்லத்திற்கு வந்திருந்தனர். காலை 10 மணி முதல் கனிமொழியை பார்ப்பதற்காக ஸ்டாலின் சுமார் அரை மணிநேரம் காத்திருந்தார். பிறகு இவர்கள் கோர்ட்டு வளாகத்திற்கு வந்ததும் கனிமொழிக்கும் ஆ.ராசாவுக்கும் நடுவே அமர்ந்திருந்த ஸ்டாலின் அவர்கள் இருவரிடமும் சுமார் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். திஹார் சிறையில் அளிக்கப்பட்டுவரும் வசதிகள் குறித்து அவர்கள் இருவரிடமும் ஸ்டாலின் கேட்டறிந்தார். சிறையில் உள்ள சூழ்நிலைகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்றெல்லாம் அவர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். கருணாநிதியின் உடல்நலம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஸ்டாலினிடம் கனிமொழியும் ராசாவும் கேட்டு தெரிந்துகொண்டனர். மேலும் சென்னையில் உள்ள தங்களது குடும்பத்தினர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் தனது சகோதரர் ஸ்டாலினிடம் கனிமொழி கேட்டறிந்தார். இந்த சந்திப்பு ஒரு உருக்கமான சந்திப்பாக இருந்தது.
நேற்று முன்தினம் கனிமொழியை திஹார் சிறையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி சந்தித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் கனிமொழியை அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி திஹார் சிறையில் சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சுமார் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்