முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்லாந்து டெஸ்ட்: நியூசி., வீரர் மெக்குல்லம் இரட்டை சதம்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, பிப். 8 - இந்தியாவுக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 503 ரன்னைக் குவித்தது. பின்பு முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி ரன் எடுக்க திணறி வருகிறது. இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. 

நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் மெக்குல்லம் இரட்டை சதமும், வில்லியம்சன் சதமும் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று முன் தினம் துவங்கியது. 

நியூசிலாந்து அணி 30 ரன்கள் சேர்ப்பதற் குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரூதர்போர்டு 6, புளூட்டன் 13, ராஸ் டெய்லர் 3 ரன்னில் வெளியேறினர். 

இதனால் குறைந்த ரன்களுக்குள் நியூசிலாந்து அணியை இந்தியா சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வில்லியம்சன் _ மெக்குல்லம் ஜோடி இந்திய அணியின் எண்ணத்தை தவிடு பொடியாக்கியது. 

இந்த ஜோடி 4_வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்து மிரட்டியது. வில்லியம்சன் 113 ரன் விளாசி ஆட்டமிழந்தார். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. மெக்குல்லம் 143, கோரே ஆண்டர்சன் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

நேற்று 2_வது நாள் ஆட்டத்தை அந்த அணி தொடர்ந்தது. ஆண்டர்சன் 77, வாட்லிங் 1 ரன் எடுத்து இஷாந்த் பத்தில் ஆட்டமிழந்தனர். 

சௌதி 28 ரன்னில் ஷமி வீசிய பந்தில் போல்டானார். சிறப்பாக ஆடிய மெக்கு ல்லம் 280 பந்துகளில் 3 சிக்சர், 28 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் அடித்தார். 

அவர் 224 ரன் (307 பந்து, 5 சிக்சர், 29 பவுண்டரி) எடுத்து இஷாந்த் பந்தில் அவுட்டானார். சோதி 23, வாக்னர் 0 ரன்களில் வெளியேறினர். 

இறுதியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 503 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. 

இந்திய அணி சார்பில், இஷாந்த் சர்மா 6 விக்கெட்டைக் கைப்பற்றினார். தவிர, ஜாஹிர்கான் 2 விக்கெட்டும், ஷமி மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரிலேயே ஷிகார் தவான் 0, புஜாரா 1 ரன்களில் போல்ட் பந்தில் அவுட்டானார்கள். 

அடுத்து களமிறங்கிய கோக்லி 4 ரன்னில் சௌதி பந்தில் பெவிலியன் திரும்பினார். 10 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணிக்கு 3 விக்கெட் காலியானது. 

சிறிது நேரம் தாக்குப் பிடித்து ஆடிய முரளி விஜய் 60 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 26 ரன் எடுத்து வாக்னர் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 51 ஆக இருந்தது. 

38 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ரோகித் சர்மா 66, ரகானே 19 ரன்னுடன் களத்தில் இருந்தனர். 

379 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் பாலோ ஆனை தவிர்க்க இருவரும் போராடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்