1945ல் வீசப்பட்ட வெடிகுண்டு: போலீஸார் செயலிழக்கச் செய்தனர்

Image Unavailable

 

ஹாங்காங்,பிப்.9 - இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங் மீது வீசப்பட்ட சுமார் 1 டன் எடை கொண்ட வெடிகுண்டை ஹாங்காங் போலீஸார்  வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தனர்.

ஹாங்காங், ஹேப்பி பள்ளத்தாக்கு பகுதியில் நகரின் புகழ்பெற்ற டௌன்டவுன் ரேஸிங் டிராக் அருகில் சுமார் 1 டன் எடை கொண்ட வெடிகுண்டை கட்டுமானத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை கண்டனர். குடியிருப்புகள், ஹோட்டல்கள், சீக்கியர் குருத்வாரா என அதிக மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளானது.

இதையடுத்து அப்பகுதியை சுற்றி அரண் அமைத்த போலீஸார், அங்கிருந்த 2 ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து 2,260 பேரை வெளியேற்றினர். ஹாங்காங் போலீஸின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 15 மணி நேரம் போராடி வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

இதுகுறித்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வெடிகுண்டு 2 ஆயிரம் பவுண்ட் எடையும் (சுமார் 1 டன்), 1.7 மீட்டர் நீளமும், 600 செ.மீ. விட்டமும் கொண்டது. அதனுள் அபாயகரமான வெடிபொருள் இருந்ததால், ஓரத்தில் துளையிட்டு பிரிக்கும்போது வெடிக்காமல் இருக்க சுற்றிலும் குறைந்த வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொண்டோம். இதுபோன்ற தொழில்நுட்பக் காரணங்களால் அதை பிரித்தெடுக்க அதிக நேரமாகியது. இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகியிருக்கும்” என்றார்.

ஏஎன்எம்-66 என்ற இந்த வெடிகுண்டு 1945ல் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க கடற்படையால் வீசப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் வெடிக்காத வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம்தான் என்றாலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகளில் இதுவே மிகப் பெரியது.

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1941 டிசம்பரில் ஜப்பான் படையெடுப்பை எதிர்த்து கடுமையாக போரிட்டது. 1945 வரை ஹாங்காங் ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் ஜப்பான் ராணுவத்துக்கு எதிராக அமெரிக்க கடற்படையால் இந்த வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ