முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அகில இந்திய கபாடி: அமைச்சர் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப் 23 -  முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரையில் அகில இந்திய அளவிலான ஆண்,பெண் கபாடி போட்டிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று துவக்கி வைத்தார்.

   அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 66- பிறந்த நாள் விழா மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான ஆண்,பெண் கபாடி போட்டிகள் தமுக்கம் மைதானத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டிகளை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நேற்று தலைமையேற்று துவக்கி வைத்தார்.  இந்த விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி,கே, ஜக்கையன் , மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணைச்செயலாளர் சி.தங்கம், துணை மேயர் ஆர்.கோபால கிருஷ்ணன், கவுன்சிலர்கள் அபுதாகீர்,பி.குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய கபாடி போட்டிகள் நேற்று முதல் நாளை 24 ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னொலி விளையாட்டு அரங்கில் நடைபெறும். போட்டிகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறந்த முறையில் பார்வையாளர் கேலரிகள் அமைக்கப்பட்டது.அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியன் ஏர்போர்ட் , விஜயா வங்கி, கேரள ஸ்டேட்,மத்திய போலீஸ் ,தமிழ்நாடு போலீஸ்,சிவந்தி அகாடமி,கலா சிமெண்ட், யாதவா கல்லூரி, லேடி டோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது. 

  இறுதி போட்டியில் வெற்றி பெறும் ஆண்,பெண் கபாடி அணிகளுக்கு விளையாட்டு துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசு கோப்பைகளையும், ரொக்கப்பரிசுகளையும் வழங்கி பேசுகிறார். ஆண்கள் பிரிவில் முதலிடம் பெறும் அணிக்கு  ஒரு லட்சத்து ஆறுபத்தி ஆறு ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரத்து66 ரூபாயும், மூன்றாம் , நான்காம் பரிசாக 40 ஆயிரத்து 66 ரூபாயும் இவைகளுடன் அம்மா கோப்பைகளும் பரிசாக வழங்கப்படுகிறது. பெண்கள் பிரிவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 66 ரூபாயும், இரண்டாம் பரிசாக 46 ஆயிரத்து 66 ரூபாயும், மூன்றாம் பரிசாக 26 ஆயிரத்து 66 ரூபாயும், இவைகளுடன் அம்மா பரிசு கோப்பையும் வழங்கப்படுகிறது.

     அகில இந்திய அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் இந்த மாபெரும் கபாடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட அமெச்சூர் கபாடி கழக செயலாளர் அகஸ்டின், சேர்மன் வல்லரசு,மேற்பார்வையில் மதுரை மாநகர் மாவட்ட  அதிமுக நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்