சாமுண்டீஸ்வரி கோவிலில் ஜெயலலிதா சிறப்பு வழிபாடு

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      அரசியல்
Amma Visit Samundeeswari Temple photo (1)

மைசூர், பிப்.25 -  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று தனது 63-வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூர் சென்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாள் நேற்று தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் அன்னதானம், ரத்ததானம், போன்ற நற்பணிகளில் ஈடுபட்டனர். ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. தொண்டர்களுக்கு ஒ.பன்னீர் செல்வம் இனிப்பு வழங்கினார். இதேபோல் தமிழகம் முழுவதும் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு மைசூர் சென்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்ய முடிவு  செய்திருந்தார்  ஜெயலலிதா. நேற்று காலை 10 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார் ஜெயலலிதா. அவரது வீட்டு வாசலில் தலைமைக் கழக நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும், மகளிரணியினரும் திரளாக கூடியிருந்து அவரை வழியனுப்பி வைத்தனர். முன்னதாக மகளிரணியினர் அவருக்கு ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள். காலை 10.40 மணியளவில் ஜெயலலிதா சென்னை விமானநிலையம் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து காலை 10.55 மணிக்கு தனி விமானம் மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், மதுசூதனன், தளவாய் சுந்தரம், செங்கோட்டையன், ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலரும் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா, அவரது உதவியாளர் பூங்குன்றம், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் உடன் சென்றனர். மைசூர் சென்ற ஜெயலலிதாவை அங்குள்ள கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றார். கோவில் வாசலில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அர்ச்சகர்களும் அவரை வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனையும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன. தரிசனம் முடிந்ததும் அர்ச்சகர்கள் அவருக்கு பிரசாதம் கொடுத்தனர்.  சுவாமி தரிசனம் முடித்த பிறகு அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா விமான நிலையம் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தனது மைசூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜெயலலிதா நேற்று பிற்பகலில் சென்னை திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: