முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் - மொரானி ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.27 - ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சினியுக் இயக்குனர் கரீம் மொரானி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியதில் சினியுக் இயக்குனர் கரீம் மொரானிக்கு தொடர்புள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையொட்டி அவர் டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி சைனி நிராகரித்துவிட்டார். இதனையொட்டி மொரானி ஜாமீன் கேட்டு வழக்கமான மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. 

சி.பி.ஐ.சார்பாக பிரபல வழக்கறிஞர் ஏ.கே.சிங் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது. இந்த பணம் கைமாறுவதற்கு சினியுக் இயக்குனர் மொரானி உதவி செய்துள்ளார். இதற்காக அவர் கமிஷன் ரூ.6 கோடி வாங்கியுள்ளார். அதனால் மொரானிக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்றார்.

மொரானி சார்பாக வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா என்பவர் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக மொரானியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது மொரானியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யவில்லை. மேலும் இந்த ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மொரானிக்கு தொடர்பு எதுவும் இல்லை. அதனால் மொரானிக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று லுத்ரா மேலும் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்