முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை அருகே காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் மோதல்

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மே.27 -புதுவை சட்டசபை காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் கந்தசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ராஜவேலும் போட்டியிட்டனர். இதில் ராஜவேலு வெற்றி பெற்றார். தேர்தலையொட்டி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. 

ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட சேலியமேட்டில் நேற்று முன்தினம் மோதல் வெடித்தது. 

காங்கிரஸ் தொண்டர் வீரபாலு நேற்று முன்தினம் மாலை பாகூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அப்போது அவரை என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ஜெயந்தன், வேல்முருகன், அறிவுக்குமார், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் வீரபாலு காயம் அடைந்தார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரசார் கோபம் அடைந்தனர். சேலியமேட்டில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர் செங்குட்டுவன் வீட்டை காங்கிரஸ் ஆதரவாளர்கள் அய்யனார், ஜெயகாந்தன், அய்யாகுமார், வேலு, நேரு ஆகியோர் கல்வீசி தாக்கி, வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், பாத்திரங்களை சேதப்படுத்தினர். 

இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். 

அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேருடைய வீடுகளை தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீ அணைத்தனர். 

இதைதொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே விடிய விடிய மோதல் நடந்தது. இருதரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. 

இந்த சம்பவங்களால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், வரதராஜன் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்