முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 - 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தரமான இலவச சீருடைகள் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்தார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பி.வி.ரமணா நேற்று கைத்தறித்துறை உயர் அதிகாரிகளுடன் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், நலிவடைந்த கைத்தறித்துறையை சீர்படுத்தி, கைத்தறி கூட்டுறவு சங்கங்களை மீண்டும் சீரமைத்து, நெசவாளர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து, கிராமங்களில் புதிய டிசைன்களில் ஆடைகள், உடைகள், வீட்டு அலங்கார பொருட்கள் ஏற்றுமதி பொருட்களாக உருவாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும், கைத்தறி பொருட்கள் ஏற்றுமதிக்கு ஏற்றவகையில், கைத்தறி ஏற்றுமதி  நிறுவனம், அரசு மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் உருவாக்கப்படும் என்றும், கைத்தறி துறைக்கென அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அமைச்சர் தக்க அறிவுரைகள் வழங்கினார்.

கைத்தறித்துறையின் கீழ் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு  சங்கங்களின் வளர்ச்சி, கூட்டுறவு நூற்பாலைகளின் செயல்பாடு, நெசவாளர்களுக்கான நலத்திட்டங்களின் செயலாக்கம், விசைத்தறி, ஜவுளித்தொழில் மேம்பாடு உள்ளிட்ட அனைத்தையும் சீரமைக்கும் வகையில் மாநில அளவில் உயர்மட்டக்குழு அமைப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆணைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தரமான சீருடைகளை ரூ.50 கோடியில் நடப்பாண்டில் குறித்த காலத்திற்குள் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தியை விரைவில் துவக்கி பொங்கல் 2012 பண்டிகையை முன்னிட்டு குறித்த காலத்திற்குள் ஏழை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையை மேம்படுத்தவும், இலாபகரமாக செயல்படுத்தவும் திட்டம் தயாரித்து வழங்கவும் ஆலோசனை கூறப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில், கைத்தறித்துறை செயலாளர் சி.முத்துக்குமாரசாமி,  கைத்தறித்துறை இயக்குனர் வெ.சந்திரசேகரன், துறை உயர் அலுவலர்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்