முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி நிறுத்தம் - தனியார் பள்ளிகள் சங்கம் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 - சமச்சீர் கல்வி திட்டம் தற்காலிகமாக ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன், செயலாளர் விஜயன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு இந்த கட்டணங்களை உடனடியாக வெளியிட வேண்டும். இக்கட்டணத்தில் நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் உடன்பாடு இல்லாவிட்டால் முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு இதனை சரிசெய்ய வேண்டும். 

சமச்சீர் கல்வியை நாங்கள் வரவேற்கிறோம். சி.பி.எஸ்.ஈ. மற்றும் சர்வதேச தரத்திலான பாடத்தினை வழங்க வேண்டும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. எனவே, மெட்ரிகுலேஷன் பாடத்தினை அரசு பள்ளிகளுக்கு அளிக்கவேண்டும். 

சமச்சீர் கல்வி திட்டத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்கிறோம். இதற்காக அமைக்கப்பட இருப்பதாக வல்லுனர் குழு உடனடியாக அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் சங்கத்தில் உள்ள 6,500 பள்ளிகளிலும், பள்ளிக்கு தலா 50 மாணவர்களுக்கு இலவச கல்வி, சீருடை, புத்தகங்கள் வழங்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு கட்டிட வரி விலக்கு 1994ல் அளிக்கப்பட்டது. அடுத்து வந்த தி.மு.க. அரசு இதனை ரத்து செய்துவிட்டது. மீண்டும் முதல்வராக வந்துள்ள ஜெயலலிதா மீண்டும் கட்டிட வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோருகிறோம்.

அதே போல் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை 10 வருடத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே போல் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் குணசேகரன், செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

சமச்சீர் கல்வி திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள கல்வித்திட்டம் தரமானதாக இல்லை என்பது தான் உண்மை. 

1 முதல் 9 ம் வகுப்பு வரைக்கும் தேசிய கல்வித்திறன் அடிப்படையில் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி அளிக்கப்படுகிறது. 

நீதிமன்றத்தின் உத்தரவின்படி தான் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படுகிறது. இதனை சென்ற ஆண்டே அமல்படுத்தியிருக்கக்கூடாது. ஏனெனில் உச்சநீதிமன்றம் கொண்டுவந்த சில வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, தற்போது சட்டப்படி தான் சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்