முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜீனியரிங் சேர்க்கைக்கு புதிய நுழைவுத் தேர்வு கிடையாது

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி,மே.27  - என்ஜீனியரிங் சேர்க்கைக்கான புதிய நுழைவுத் தேர்வு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அகில இந்திய என்ஜீனியரிங் சேர்க்கைக்கு புதிதாக நுழைவு தேர்வு நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக கடந்த 1 ம் தேதி அகில இந்திய என்ஜீனியரிங் நுழைவுத் தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த போது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வினாத்தாள் வெளியானது. லட்சக்கணக்கான ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்கப்பட்டன. வினாத்தாள் அவுட்டானதால் மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணிக்கு நடக்க வேண்டிய நுழைவு தேர்வு 3 மணி நேரம் தாமதமாக மதியம் 12.30 மணிக்கு நடந்தது. 

சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் நுழைவு தேர்வு எழுதினார்கள். குழப்பம் காரணமாக தேர்வு எழுத இயலாதவர்களுக்கு 11 ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சில மாணவர்கள் நுழைவு தேர்வு குளறுபடியால் நாங்கள் தேர்வு எழுத முடியாமல் போய் விட்டது. எனவே அகில இந்திய நுழைவு தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். மாணவர்களின் மனுவை பரிசீலித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள், என்ஜீனியரிங் நுழைவு தேர்வை மீண்டும் நடத்த இயலாது என்றனர். மீண்டும் தேர்வை எழுத உத்தரவிட்டால் 97 சதவீதம் பேருக்கு அசவுகரியம் ஏற்படும் என்று கூறி மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்தனர். 

இதனால் மாணவர்கள் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் அகில இந்திய என்ஜீனியரிங் நுழைவு தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். புதிதாக மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாணவர்கள் கோரிக்கையை நீதிபதிகள் சிங்வி, பிரசாத் ஆகியோர் மறுத்து விட்டனர். என்ஜீனியரிங் நுழைவு தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட இயலாது என்று தீர்ப்பளித்தனர். 

மீண்டும் நுழைவு தேர்வு நடத்தப்பட்டால் 10 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே கடந்த 1 ம் தேதி நடந்த நுழைவு தேர்வு முடிவை சி.பி.எஸ்.சி வெளியிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக அகில இந்திய என்ஜீனியரிங் சேர்க்கைக்கு புதிதாக நுழைவு தேர்வு நடக்காது என்பது உறுதியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்