முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமாரை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா ருசிகர விளக்கம்

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 28 - சபாநாயகரை அவை முன்னவரும் எதிர்க்கட்சி தலைவரும் கரம் பிடித்து அழைத்துச்சென்று ஆசனத்தில் அமரவைப்பது ஏன் என்பது குறித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ருசிகரமாக விளக்கம் அளித்தார். புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை வாழ்த்தி பேசியபோது அவர் அந்த விளக்கத்தை அளித்தார்.  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவைத் தலைவர் மற்றும்  பேரவைத் துணைத் தலைவர் ஆகியோரை வாழ்த்தி, பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரை வருமாறு:​​
மக்களே, மக்களுக்காக, மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர் முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன்.  இப்படிப்பட்ட மக்களாட்சி மலர்வதற்கு முன், பல்வேறு வகையான ஆட்சிகள் பல அமையப் பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் மக்கள் கருத்துக்களுக்கு செவி சாய்க்காத ஆதிக்க ஆட்சிகளாகவே திகழ்ந்தன. மக்களாட்சி ஏற்பட்ட பின்பும், தனி மனிதன் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சிகள் மக்களாட்சி என்ற போர்வையில், பல்வேறு இடங்களில் நடைபெற்றே வந்துள்ளன. ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்தும், குடும்ப ஆட்சி கூட ஜனநாயகத்திற்கு விரோதமாக, மக்களின் பொது நன்மைக்கு எதிராக, ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கு முரணாக, மக்களாட்சி போன்ற தோற்றத்தில் அமைக்கப்படுவது தான்.  
மிக அதிகமானவர்களுக்கு, மிக அதிக நன்மையைப் பயப்பது தான்  உண்மையான மக்களாட்சி.
இப்படிப்பட்ட மக்களாட்சி முறையை செயல்படுத்தும் மன்றம் இந்த சட்டமன்றம். ஓர் அரசாங்கத்தை தங்கு தடையின்றி நடத்தி, பலதரப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று, மக்கள் பயன்பெறும் வகையில் சட்டங்கள் இயற்றி, ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் செயல்படுகின்ற மன்றம் இந்த சட்டமன்றம். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க, இந்த சட்டமன்றத்தின் தலைவராக தாங்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள். தங்களுடைய தேர்வுக்கு எனது மனமார்ந்த மகிழ்ச்சியினையும், பாராட்டினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.  
பேரவைத் தலைவர், தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து, தங்களை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தார்கள்.  இது சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒரு நடைமுறை.  நாடாளுமன்ற மக்கவையானாலும், மாநிலங்களிலுள்ள சட்டமன்றப் பேரவையானாலும், சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுபவரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கரம் பிடித்து அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரவைப்பது வழக்கம்.  இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது?  இந்தப் பழக்கம் எப்படி வந்தது? என்பதை எடுத்துச் சொன்னால் அனைவருக்கும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன்.  இந்த மரபுக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.  நம்முடைய இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டிஷ் ஜனநாயகத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது.  இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் எவ்வகையில் அமைக்கப்பட்டதோ அதே வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்தியப் பாராளுமன்றமும், இந்திய சட்டமன்றங்களும். அங்கே, இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாராளுமன்றம் வந்துவிட்டது.  அது மன்னர் ஆட்சி இருந்த காலம்.  சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார்.  பாராளுமன்றமும் இருக்கும். இங்கே இந்தியாவில் அந்த முறையைப் பின்பற்றியபோது மன்னர் இல்லை.  ஜனாதிபதி இருக்கிறார்.  பின்னர் பாராளுமன்றம் இருக்கும். அந்தக் காலத்தில்  இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று விரும்புவார்.  அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும்.  பெரும்பாலும் பாராளுமன்றத்தில், உறுப்பினர்கள் மன்னருடைய விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள்.  இந்தச் செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் பேரவைத் தலைவர்.  அதனால்தான் பாராளுமன்றத் தலைவர் என்று பெயரை வைக்காமல் ஸ்பீக்கர் என்று பெயர் வைத்தார்கள்.  ஏனென்றால் பாராளுமன்றத்தின் கருத்து என்னவோ அதைச் சென்று மன்னரிடம் எடுத்து உரைப்பவர்தான் ஸ்பீக்கர். நாம் தான் இங்கே பேரவைத் தலைவர் என்று அழைக்கிறோமே தவிர, இன்று வரை, அங்கே (வெளிநாட்டில்),  இங்கிலாந்தில், ஸ்பீக்கர் என்றுதான் அழைக்கிறார்கள்.  அப்படி மன்னர் எதை விரும்பினாரோ அதை செய்ய இயலாது  என்று ஒரு ஸ்பீக்கர் சென்று துணிச்சலுடன் மன்னரிடம் கூறும்போது என்ன நடக்கும்?  சில காரியங்கள் செய்வதற்கு தான் மன்னருக்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.  ஆகவே, தான் விரும்பியது நடக்காது என்று ஸ்பீக்கர் எடுத்துரைக்கும் போது, உடனே மன்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார்.  தலையை வெட்டி எடுங்கள் என்று ஆணையிடுவார்.  இது பலமுறை நடந்ததால் யாருமே அந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.  ஆகவே, புதியதாக பாராளுமன்றம் அமையும்போது, ஒரு ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கும்போது, இன்னார் தான் ஸ்பீக்கர் என்று அறிவித்தவுடன் அவர் உடனே தப்பித்தால் போதும், தலை தப்பித்தால் போதும்  என்று ஓட்டம் பிடிப்பார்.  அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து, இழுத்து வந்து, ஆசனத்தில் அமர வைப்பார்கள்.  இதுதான் அந்த காலத்தில் இருந்துவந்த மரபு. காலப்போக்கில் அது மாறி இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு, ஸ்பீக்கர் இப்போது ஓட்டம் பிடிக்கவேண்டிய அவசியமும் இல்லை,  ஸ்பீக்கரின் தலையை எடுங்கள் என்று சொல்லக்கூடிய மன்னரும் இங்கே இல்லை.  ஆனால், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் பேரவைத் தலைவரின் கரங்கப் பிடித்து ஆசனத்தில் அமர வைக்கும் மரபு மட்டும் அப்படியே இருக்கிறது.  
பேரவைத் தலைவர் , ஆளுங்கட்சி சார்பில் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். nullநீங்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை நாங்கள் எந்த நாளிலும் உருவாக்கமாட்டோம்.    பேரவைத் தலைவர், இந்த அவையிலே ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஓர் உண்மையான மக்கள் அரசு எவ்வாறு வாக்களித்தோருக்கும், வாக்களிக்காதோருக்கும், பொதுவாக செயல்படுகிறதோ, அதே போன்று, இந்த அவையிலே உள்ள அனைத்து சாராருக்கும் பொதுவானவர் nullநீங்கள். பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும், பேரவை உறுப்பினர்களின் மதிப்பையும், பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இந்த மாமன்ற உறுப்பினர்கள் உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். பேரவையின் தலைவர் என்பவர் எவ்வாறு நடுநிலையோடு விளங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்  து.சிவசண்முகம் பிள்ளை. அவரைப் பொறுத்தவரை அமைச்சரும் ஒன்று தான், உறுப்பினரும் ஒன்று தான்.  ஆளும் கட்சி உறுப்பினர், எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வித்தியாசமின்றி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்புடன் நடந்து கொள்வார் என்பதை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். இவரைப் போலவே, டாக்டர் கிருஷ்ணா ராவ்வும் நடுநிலையோடு அவையை நடத்தி அனைத்து உறுப்பினர்களின் பாராட்டினையும் பெற்றிருக்கிறார். இதே போன்று, செல்லப்பாண்டியனும் அவையை நடுநிலையோடு நடத்தியதில் தனி முத்திரையை பதித்து இருக்கிறார்.  
இந்த வரிசையில் அனைத்து உறுப்பினர்களின் அன்பையும் பெற்றவராகத் திகழ்ந்தவர் மறைந்த டாக்டர் கா.காளிமுத்து.  பேரவைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தாங்கள் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். நான்கு முறை இந்த மாமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறை, அதாவது பத்தாண்டு காலம், அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறீர்கள். குறிப்பாக, சட்ட அமைச்சராக பணியாற்றிய அனுபவம் தங்களுக்கு உண்டு. மூன்றாவது முறை, எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்து, ஆளும் கட்சியின் குறைகளை, அராஜகங்களை சுட்டிக்காட்டிய அனுபவமும் தங்களுக்கு உண்டு. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஆளும் கட்சியின் அமைச்சராக இருந்த அனுபவமும், எதிர்க்கட்சி உறுப்பினராக பணியாற்றிய அனுபவமும், தங்களுக்கு உண்டு.  இரு சாராரின் மன நிலையையும் தாங்கள்  நன்கு அறிந்தவர் என்பதால், நான்காவது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள nullங்கள் பேரவைத் தலைவராக இன்று ஏற்றிருக்கின்ற இந்தப் பொறுப்பை மிக நல்ல முறையில் நிறைவேற்றுவீர்கள், அனைவரது பாராட்டினையும் தாங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். சீர்மிக்க இந்த அவையின், இழந்த பழம் புகழை, மீட்பதற்கான பக்குவத்தினையும், பயிற்சியினையும் தாங்கள் பெற்றிருக்கிறீர்கள்.  தங்களுடைய சட்டமன்ற அனுபவமும், அனைவரிடத்திலும் அன்பாக பழகும் தங்களுடைய குணமும், இந்தப் பேரவையை நல்ல முறையில் நடத்திச் செல்ல நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.  து.சிவசண்முகம் பிள்ளை, டாக்டர் ரு. கிருஷ்ணா ராவ், செல்லபாண்டியன்,  சூ.கோபால மேனன் போன்றவர்கள் எல்லாம் இந்தப் பேரவையின் கண்ணியத்தை எப்படிக் காத்தார்கள்; அதே சமயத்தில் கனிவுடனும், கண்டிப்புடனும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், மரபுகள், நெறிமுறைகள் ஆகியவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து, குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக, அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டமன்ற ஜனநாயகப் பண்புகள், நெறிமுறைகள், பேணிப் பாதுகாக்கப்படும் வகையிலும் இந்த அவைக்கு தாங்கள் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றுவிட்டது; எதிர்க்கட்சியினருக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன என்ற சூழ்நிலை தற்போது நிலவினாலும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் அமுத மொழிக்கு ஏற்ப, எதிர் கட்சியினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க ஆளும் கட்சி தயங்காது என்பதையும்  சட்டமன்ற ஜனநாயகம் வாழவும், வளரவும், வளம் பெறவும், நிலைத்து நிற்கவும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதையும் தங்கள் வாயிலாக இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்குத் துணையாக, பக்கபலமாக, ஏழை, எளிய விவசாய குடும்பத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதுகலைப் பட்டம் பெற்றவரும்; ஏற்கெனவே கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் வழங்கல், மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியவரும்; இதற்கு முன்பு நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவருமான ப. தனபால்  பேரவைத் துணைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்.  அவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வதோடு, கடமை உணர்வோடு பணியாற்றி, அனைவரது பாராட்டினையும், அவர் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.  பேரவைத் தலைவர், கட்சி சார்பற்ற நடுநிலையை இந்த அவையில் தாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற என் அவாவினை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த அவையின் வரலாற்றில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், நடுநிலை எப்படி கடைபிடிக்கப்பட்டது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்றாலே எட்டிக்காய் போன்ற கசப்புணர்வு காணப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியது; அவை நடவடிக்கையையே சில மணித் துளிகளுக்கு ஒத்தி வைத்தது; மைனாரிட்டி என்ற சொல்லை சட்டமன்ற மரபிற்கு ஒவ்வாத சொல்லாக பாவித்தது; தமிழ்ப் பண்பாட்டையே சீர்குலைக்கும் வகையில் வணக்கம் தெரிவித்தால், பதில் வணக்கம் கூட தெரிவிக்காதது என பல மரபு மீறிய, விதிகளுக்கு முரணான சம்பவங்கள் இந்த சட்டமன்றப் பேரவையில் நிகழ்த்தப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பொறுத்த வரையில், ம் என்றால் வெளியேற்றம், ஏன் என்றால் தற்காலிக பணி nullநீக்கம் என்ற நடைமுறை தான் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் கடைபிடிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம், யாரையும் குற்றம் சாட்ட வேண்டும், குறை கூற வேண்டும் என்பதற்காக அல்ல; அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனிதர்களை மதிக்கும் நல்ல பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும்; தமிழ்ப் பண்பாடு போற்றப்பட வேண்டும்; அவையின் மரபும், மாட்சிமையும், மதிப்பும், காக்கப்பட வேண்டும், என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் இதையெல்லாம் எடுத்துக் கூறுகிறேன் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அவ்வாறே இப்பேரவையின் மாண்பினை தாங்கள் மீண்டும் நிலை நிறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தவறு நிகழ்ந்த பின் தண்டிப்பது என்ற தத்துவத்தைவிட, தவறு நிகழாதபடி கண்டிப்பது என்பது மிகவும் சிறந்தது என்பதைச் சுட்டிக்காட்டி,  நாணயமான தராசு  முள் போல், எந்தப் பக்கமும் சாயாமல் தீர்ப்பு கூறுவது தான் உண்மையான நடுவு நிலைமை என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றிற்கு ஏற்ப, தங்களின் பணி அமைய வேண்டும்; நடுநிலை தவறாமல், நல்லதைப் பாராட்டி, தவறைத் தட்டிக் கேட்கும் சபாநாயகராக, நடுநிலை நழுவா நாயகராக தாங்கள் விளங்க வேண்டும்; தங்களது நடுநிலைப் பணி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்; இதைத் தாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்பதைத் தெரிவித்து, தங்களையும், பேரவை துணைத் தலைவரையும், மீண்டும் ஒருமுறை மனதார பாராட்டி, வரவேற்று, என்னை இந்தப் பேரவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்து, மிகப் பெரும்பான்மையோடு இங்கே ஆட்சி அமைக்க இத்தனை சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து இந்த அவைக்கு அனுப்பிய வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன்.  
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்