பாராளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல்

Mamata-Banerjee1

புதுடெல்லி, பிப்.25 - பாராளுமன்ற லோக்சபையில் இன்று 2011 - 12 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல்கள் நெருங்குவதால் இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை. கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. மேலும் நூற்றுக்கும் மேலான புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு மம்தாவால் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 21 ம் தேதி ஆரம்பமானது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், கறுப்புப்பணம் ஒழிக்கப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்றெல்லாம் அறிவித்தார். டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டி ஒரு பெரிய வெற்றி என்று அவர் வர்ணித்தார். பின்னர் 22 ம் தேதி அலுவல்கள் தொடங்கின. அப்போது சபையில் பேசிய பிரதமர், ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க எம்.பி.க்கள் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று முறைப்படி அறிவித்தார். இந்த வகையில் எதிர்க்கட்சியினரின் மனதை மாற்ற தாம் மேற்கொண்ட முயற்சி தோற்றுப்போனதாகவும் பிரதமர் ஒப்புக்கொண்டார். நேற்று முன்தினம்  3 வது நாளாக கூட்டத்தொடர் நடந்தது. அப்போது தெலுங்கானா பிரச்சனையால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாதது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராஜ்யசபையில் பதிலளித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஜாதி மதம் பார்த்து கருணை மனுக்கள்மீது முடிவு செய்யப்படுவதில்லை. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற லோக்சபையில் இன்று 25 ம் தேதி வெள்ளிக் கிழமை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2011-2012 ஆம் ஆண்டுக்கான இந்த ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே மாதம் வருவதால் நிச்சயம் ரயில் கட்டணமோ, சரக்கு கட்டணமோ உயராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் கட்டணங்களில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு மம்தாவால் வெளியிடப்படக் கூடும். எங்குமே நிற்காத 12 க்கும் மேற்பட்ட துரந்தோ ரயில்கள் உட்பட நூற்றுக்கும் மேலான புதிய ரயில்கள் பற்றி இந்த பட்ஜெட் மூலம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பயணிகளின் வசதிகளை அபிவிருத்தி செய்யவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதன் பொருட்டு பல முக்கிய நகரங்களில் மிகப் பெரிய அளவிலான சமையல் அறைகள் கட்டப்பட்டு அங்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உணவுப் பொட்டலங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகமே இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். புதிய உணவுக் கொள்கையின் அடிப்படையின் கீழ் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்திலும்  2 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் தன்னுடைய மாநிலத்துக்காக பல திட்டங்களை அறிவிக்கவிருக்கிறார் மம்தா பானர்ஜி.
ஹவுரா மற்றும் ஷீல்டா ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஒரு புதிய திட்டம் பற்றி அறிவிக்கப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். அதன் மூலம் ஓட்டுக்களை பெறவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இருந்தாலும் மற்ற மாநிலங்களுக்கும் அவர் சில ரயில் திட்டங்கள் பற்றி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சில ரயில்களின் சேவைகள் கூட நீட்டிக்கப்படலாம். வரும் 28 ம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெ
ட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், வல்லுனர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டார். தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 28 ம் தேதி சபையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அப்போது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகை ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதுதொடர்பான நிலைக்குழு பரிந்துரையும் அரசுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதால் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சட்டசபைகளுக்கான தேர்தல் நெருங்குவதால் புதிய வரிகள் இருக்காது. மாறாக சலுகைகளை ஓரளவு எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் மேற்கண்ட பட்ஜெட்டுகள் தேர்தல் பட்ஜெட்டுகளாகவே அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ