ஐ.நா. தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்: இலங்கை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,மார்ச்.5 - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவா நகரில் திங்கள் கிழமை தொடங்கியிருக்கும் நிலையில், தங்களுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என இலங்கை கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே கூறுகையில், இத்தீர்மானத்தை எதிர்கொள்ள அரசு தயார்நிலையில் உள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை யுள்ளது என்றார்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்த போதிலும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டோர் மீதான நடவடிக்கை மற்றும் தமிழ் சிறுபான்மை மக்களுடன் நல்லிணக்கப்பணிகளில் போதிய முன்னேற்றம் இல்லாததால், இலங்கையை கண்டித்து ஐ.நா. மூன்றாவது தீர்மானத்தை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக, இதற்கு முன் அமெரிக்கா கொண்டு வந்த 2 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது இந்த ஆண்டு இந்தியாவின் தேர்தல் ஆண்டாக இருப்பதால் தமிழ்நாடு தொடர்பாக இந்திய அரசுக்குள்ள அரசியல் நிர்பந்தத்தை இலங்கை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த வாரம் கூறியிருந்தார்.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் (பிம்ஸ்டெக்) உச்சி மாநாடு மியான்மர் தலைநகர் நைப்பியதாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்கச் சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றுசந்தித்து பேசினார்.

இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற காமன் வெல்த் நாடுகள் மாநாட்டை மன் மோகன் சிங் புறக்கணித்த பின், அவரை ராஜபக்சே சந்தித்தது இதுவே முதல்முறை.

பிம்ஸ்டெக் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடு இந்தியா மட்டுமே.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவா நகரில் நடந்து வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவி பிள்ளை, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச் சர்கள் உரையாற்றினர். இவர்களின் உரையில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.

நவிபிள்ளை தனது சமீபத்திய அறிக்கையில், 2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட சண்டையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தியிருந்தார். ஆனால் நவிபிள்ளையின் இந்தக் கோரிக்கை நியாயமற்றது, இலங்கையின் உள்விவகாரத்தில் அத்துமீறி தலையிடுவதற்கு ஒப்பானது என்று கூறி இலங்கை நிராகரித்தது. மேலும் தங்கள் அரசால் நியமிக்கப்பட்ட போர் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது உள்பட தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக் கைகளே போதுமானது என இலங்கை வலியுறுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: