முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி பெரியாறு அணையில் ஆய்வுப் பணி

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

கம்பம்,மே- .28 - சி.எஸ்.எம்.ஆர்.எஸ். வழிகாட்டுதலின் படி நவீன தானியங்கி எந்திரத்தின் மூலம் பெரியாறு அணையில் ஆய்வு பணி தொடங்கியது.
பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட் சார்பில் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 21 ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அணையின் தரை பகுதியில் ஆர்.ஓ.வி எந்திரம் மூலம் படம் எடுக்க கடந்த மார்ச் 12 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆர்.ஓ.வி. எந்திரத்துக்கு போதிய மின் அழுத்தம் கிடைக்காததால் படம் எடுக்க இயலாமல் ஆய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் புது டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்களின் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆர்.ஓ.வி. எந்திரத்தை தயாரித்த பிரான்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் உதவியுடன் 1,200 அடி நீளமுள்ள மெயின் அணையில் 136 அடி உயரத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் நவீன காமிராக்களை கொண்டு சென்று அணையில் விரிசல், சேதம், நீர்க்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய படம் எடுத்தனர். இந்த ஆய்வின் போது தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில் நுட்ப குழுவினர் உறுப்பினர் ராமச்சந்திரன் அணையின் செயற்பொறியாளர் ராஜேஷ் உதவி கோட்ட பொறியாளர் ராஜகோபால், உதவி பொறியாளர்கள் நாகஜோதி, மல்லிகா உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து தமிழக அதிகாரிகள் நிருபர்களிடம் கூறும் போது, உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் உத்தரவுப்படி புது டெல்லி சி.எஸ்.எம்.ஆர்.எஸ். நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை குறித்தும் அதன் உறுதி தன்மை குறித்தும் ஏற்கனவே பல முறை ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தற்போது நடத்தப்படும் தொழில் நுட்ப ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்