முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானம் விபத்து: 239 பேர் பலி

சனிக்கிழமை, 8 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர்,மார்ச்.9 - 239 பேருடன் காணாமல் போன மலேசிய விமானம், வியட்நாமின் தோ சு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இத்தகவலை வியட்நாம் கடற்படை அதிகாரி ஒருவர் அரசு செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

 அவர்  மேலும் கூறுகையில், வியட்நாம் கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் இல்லாததால், அருகில் உள்ள தீவுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காக படகுகள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.

மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 777- 200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் நேற்றுக்காலை காணாமல் போனது. விமானத்தில் 12 சிப்பந்திகள், 2 குழந்தைகள் உள்பட 239 பேர் இருந்தனர். விபத்தில் விமானத்தில் இருந்த 239 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் உள்பட இந்தியர்கள் 5 பேர் அடங்கும். அவர்களை பற்றி முழுத்தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. 

விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,"எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதே நாளில் காலை 6.30 மணிக்கு பீஜிங் விமான நிலையத்திற்கு விமானம் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் அதிகாலை 2.40 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது. விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் 5 இந்தியர்கள், சீனாவைச் சேர்ந்த 152 பேர், மலேசியாவைச் சேர்ந்த 38 பயணிகள், இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 பயணிகள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 6 பயணிகள், பிரான்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த 3 பயணிகள், நியூசிலாந்து, உக்ரைன், கனடா நாட்டிலிருந்து தலா ஒரு பயணிகள் விமானத்தில் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக விமானம் காணவில்லை என்ற செய்தி வெளியானதும், அச்செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆன் தெரிவித்தார். மேலும் வெளியுறவு அமைச்சகமும், விமான போக்குவரத்து துறையும் அவசர கால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும், விமானம் குறித்த தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். தென் சீன கடல் பகுதியிலும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், காணாமல் போனதாக கூறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானத்தில் இருந்து சிக்னல்கள் பெறப்பட்டதாக வியட்நாம் ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனை சீன ஊடகங்களும் உறுதிப் படுத்தின. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் விமானம் வியட்நாமின் தோ சு தீவுகள் அருகே விபத்துக்குள்ளானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்