கனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Image Unavailable

புதுடெல்லி, மே.- 30 - கனிமொழி எம்.பி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி ஐகோர்ட்டில் நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி. கடந்த 20 ம்தேதி சி.பி.ஐ. போலீசாரல் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கனிமொழி எம்.பி.கலைஞர் டி.வி. யில் பங்குதாரராக  உள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய சினியுக் பிலிம்சிடமிருந்து கலைஞர் டி.வி. க்கு பணம் கை மாறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்ததால் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 23ம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் என் மீதான  குற்றச்சாட்டுக்கள் தவறானவை. கலைஞர் டி.வி.யின் எந்த செயல்பாட்டிற்கும் எனக்கும் தொடர்பில்லை. பணபரிவர்த்தனையில் நான் பலனடையவில்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் தான் கவனித்துக் கொள்ளவேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும். இந்த மனு கடந்த 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை நீதிபதி அஜித் பரிகோகே வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். கனிமொழியின் மனுவுக்கு பதிலளிக்குமாறு சி.பி.ஐ. க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அந்த விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பில் ஒரு வக்கீலும், கனிமொழி தரப்பில் ஒரு வக்கீலும் ஆஜராகி வாதாடுவர். இருதரப்பு வாதங்களும் முடிந்த பிறகு கனிமொழி ஜாமீன் மனு மீது நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.
டெல்லி ஐகோர்ட் வளாகம் அருகே கடந்த புதன்கிழமை அன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ