முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கார் விபத்துக்கு காரணமான லாரி பிடிப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மே.31 - அமைச்சர் மரியம்பிச்சை கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய தப்பி சென்ற லாரி மேற்கு வங்காளத்தில் பிடிபட்டது. டிரைவரை ஆந்திராவில் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி விவரம் வருமாறு:-

சுற்றுசூழல் அமைச்சர் மரியம்பிச்சை திருச்சி மேற்கு தொகுதியில் முன்னால் அமைச்சர் கே.என்.நேருவை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனவர். அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மரியம்பிச்சை தனது சொந்த ஊரான திருச்சிக்கு காரில் திரும்பினார். அங்கு தொகுதியில் நன்றி தெரிவித்து விட்டு கட்சிக்காரர்களை சந்தித்து விட்டு கடந்த மே 23 அன்று காலை சென்னையில் நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழாவிற்க்காக சென்னைக்கு காரில் கிளம்பினார்.

அதிகாலையில் பெரும்பிடுகு முத்திரையார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இன்னோவா காரில் திருச்சியிலிருந்து கிளம்பினார். காரை சென்னை முகப்பேரை சேர்ந்த டிரைவரை ஆனந்தன் என்பவர் ஓட்டினார். அமைச்சருடன் காரில் அமைச்சருடைய தனி காவலர் மகேஸ்வரன், கட்சிக்காரர்கள் கார்த்திகேயன், சரவணன், வெங்கடேசன், சீனிவாசன் ஆகியோர் வந்தனர்.

கார் திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள பாடலூரிலுள்ள திருவாலக்குறிச்சி அருகே வந்தபோது அமைச்சரின் கார் லாரி ஒன்றை முந்த முயன்றபோது அதே லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரின் இடது புறம் முற்றிலும் நொறுங்கியதில் பலத்த காயமடைந்த அமைச்சர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். உடன் வந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் கார் மோதிய லாரி நிற்காமல் சென்றுவிட்டது.

லாரியை எங்கு தேடியும் சிக்கவில்லை. இதனால் அமைச்சர் கார் விபத்து பற்றி பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக வழக்கை விசாரித்தனர். சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. ஸ்ரீதர் தலைமையில் தெற்கு மண்டல கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு கண்காணிப்பாளர் சந்திரபாசுவும் உடன் விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் விபத்துக்குள்ளான அமைச்சரின் காரை தடயவியல் நிபுணர்களும் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர் தலைமையில் 12 தனிப்படைகள் விசாரணையில் இறங்கின.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு தலைமறைவான லாரியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சோதனை சாவடிகள் வழியாக மற்ற மாநிலங்கலுக்கு சென்ற வாகனங்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு மத்திய பிரதேசம், ஹரியானா, சட்டீஸ்கர், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி மாநில உளவு பிரிவு போலீசார் துணையுடன் விசாரணை நடத்தப்பட்டது.

ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட லாரிகளின் பட்டியல் எடுத்து சோதனையிட்டதில் ஆந்திராவில் பதிவு செய்யப்பட்ட (அட16 பஆ9744) லாரிதான் விபத்தில் சம்பந்தப்பட்டு தலைமறைவான லாரி என தெரியவந்தது. சம்பந்தப்பட்ட லாரியை மேற்கு வங்காளம் கோடக்பூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் கரீம் ரஹ்மத்துல்லா என்பவனை விஜயவாடாவில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இவன் ஆந்திராவை சேர்ந்தவன். லாரியின் உரிமையாளரும் இவனே என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரிக்க உள்ளனர்.

ஏற்கனவே காரை ஓட்டிய டிரைவர் ஆனந்தன் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். ஆந்திர லாரி டிரைவரிடம் நடத்தும் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்