முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஊழல்: பிரதமரின் ஆலோசகரிடம் சி.பி.ஐ. விசாரணை

சனிக்கிழமை, 22 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.23 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நேரத்தில் இவ்வாறு விசாரணை நடந்திருப்பது காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய இமாலய ஊழல் 2ஜிஸ்பெக்ட்ரம் ஊழலாகும். இந்த ஊழல் பற்றி அம்பலமான போது உலக மக்களே வியந்து போனார்கள். இப்படியும் ஒரு ஊழல் நடக்குமா என்று மக்கள் வியந்தார்கள். ஆனால் இந்த ஊழலையும் தூக்கி சாப்பிட்ட ஊழல் என்றால் அது நிலக்கரி சுரங்க ஊழலாகும். காரணம் இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.86 லட்சம் கோடியாகும். இந்த ஊழலில் பிரதமர் மன்மோகன் சிங் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. காரணம் 2004 முதல் 2009 வரை அவர் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சுரங்க ஒதுக்கீடுகள் நடைபெற்றன. அப்போது தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில்தான் சுப்ரீம்கோர்ட்டில் முதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சில நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஊழலிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்கின. இந்தநிலையில் இந்த சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்த சி.பி.ஐ.விசாரணை சுப்ரீம்கோர்ட்டின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே. நாயரிடம் நேற்று சி.பி.ஐ.விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த விசாரணை நேரடியாக நடக்காமல் கேள்விகளாக கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு அவர் அளிக்கும் பதில் இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். எந்தெந்த நிறுவனங்களுக்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பன போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளதாம். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நடைபெற்ற இந்த விசாரணை காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் இதில் எந்த விதிமுறை மீறலும் நடக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்