முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு தணிக்கை குழு தலைவர் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே 31 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைக் குழு தலைமை அதிகாரி வினோத் ராய் நேற்று ஆஜரானார். அவரிடம் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்பது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது குறித்து வினோத்ராய் தலைமையிலான மத்திய கணக்கு தணிக்கைக் குழு ஆய்வு செய்தது. இந்த ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது. இந்த இழப்பிற்கு அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசாதான் முழுப் பொறுப்பு என்றும் இந்த குழு தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் இந்திய அரசியலில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியது. இந்த ஊழல் விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பலமான கோரிக்கையை வைத்தன. இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதிர்க்கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ தலைமையில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைக் குழு தலைமை அதிகாரி வினோத் ராய் நேற்று ஆஜராகி விளக்கமளித்தார். இந்த விசாரணை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்டுக்குழு அறையில் நடைபெற்றது. அப்போது ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது எப்படி என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு வினோத்ராய் தனது பதிலை அளித்தார். 1998 ஆண்டுமுதல் 2009 ம் ஆண்டுவரை இந்த தொலைத் தொடர்பு உரிமங்கள், அலைக்கற்றை ஒதுக்கீடுகள் எவ்வாறு செய்யப்பட்டன? எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டன? என்பது குறித்த கேள்விகளை விசாரணை குழுவினர்  கேட்டனர். அதற்கு வினோத்ராய் தனது விளக்கத்தை அளித்தார். 

கடந்த 18 ம் தேதி நடந்த கூட்டுக்குழு விசாரணையின்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்ற கணக்கு எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள கூட்டுக்குழு ஆர்வமாக உள்ளது என்று குழுவின் தலைவர் சாக்கோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய கணக்கு தணிக்கை குழுவின் இந்த மதிப்பீடு முழுக்க முழுக்க தவறானது என்றும், எந்த அடிப்படையையும் சாராதது என்றும் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் வினோத்ராய் தனது கணக்கீட்டில் எந்த தவறும் இல்லை என்று இன்னமும் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்