முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் செரீனா - ஷரபோவா

வியாழக்கிழமை, 27 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மியாமி, மார்ச் 28 - மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், ரஷியாவின் மரியா ஷரபோவாவும் மோதுகின்றனர். 

கடந்த முறை இறுதிச்சுற்றில் மோதிய இவர்கள் இருவரும் இந்த முறை அரையிறுதியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரைத் தோற்கடித்தார். 

கடும் காற்றுக்கு மத்தியில் ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7 ஏஸ் சர்வீஸ்களை அடித்த செரீனா, இரு செட்களிலும் தலா இருமுறை கெர்பரின் சர்வீஸை முறியடித்தார். வெற்றிக்குப் பிறகு பேசிய செரீனா, “மற்ற போட்டிகளைவிட இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதாக உணர்கிறேன். தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருப்பவர்களுடன் மோதும்போது ஆட்டத்திறனை அதிகரிக்க வேண்டும். அதை என்னால் செய்ய முடிகிறது” என்றார். 

மற்றொரு காலிறுதியில் ஷரபோவா 7-5, 6-1 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவைத் தோற்கடித்தார். இதற்கு முந்தைய 2 சுற்றுகளில் 3 செட்களை ஆடி கடும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கண்ட ஷரபோவா, காலிறுதியில் 2 செட்களிலேயே வெற்றி கண்டுள்ளதால் நம்பிக்கையை பெற்றிருக்கிறார். 

மியாமி மாஸ்டர்ஸில் 5 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும் ஒரு முறைகூட சாம்பியன் பட்டம் வெல்லாத ஷரபோவா, அரையிறுதிக்கு முன்னேறியது குறித்துப் பேசுகையில், “தொடக்க போட்டிகளில் நான் அபார வெற்றிகளைப் பெறாதபோதிலும் மனம் தளராமல் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இனி வரும் போட்டிகளில் துல்லியமான ஷாட்களை வெளிப்படுத்தி ஆக்ரோஷமாக ஆட முயற்சிப்பேன்” என்றார். 

அரையிறுதியில் செரீனாவை சந்திக்கவுள்ள ஷரபோவா, 2004-க்குப் பிறகு தற்போது வரை அவரை வென்றதில்லை. தொடர்ச்சியாக 14 போட்டிகளில் செரீனாவிடம் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும், உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் சந்திக்கின்றனர். 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள முர்ரே 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவைத் தோற்கடித்தார். ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டாமி ராபர்ட்டாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச்சும், முர்ரேவும் இதுவரை 19 போட்டிகளில் மோதியுள்ளனர். 

அதில் ஜோகோவிச் 11 முறையும், முர்ரே 8 முறையும் தோல்வி கண்டுள்ளனர். காலிறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கவுள்ளது குறித்துப் பேசிய முர்ரே, “நானும், ஜோகோவிச்சும் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையிலான போட்டி எப்போதுமே நீண்ட நேரம் நடைபெறக்கூடிய சவால் நிறைந்த போட்டியாக இருக்கும். இது எனக்கு சரியான பரீட்சை” என்றார். போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை வெளியேற்றினார். 

இந்தப் போட்டியில் 5 முறை காஸ்கட்டின் சர்வீஸை முறியடித்த ஃபெடரர், 8 முறை மட்டுமே “அன்போர்ஸ்டு” தவறை செய்தார். ஃபெடரர் தனது காலிறுதியில் ஜப்பானின் நிஷிகோரியை சந்திக்கிறார். 

போட்டித் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ளவரான ஜப்பானின் நிஷகோரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (7), 2-6, 7-6 (9) என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். 

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவ் 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்தவருமான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். 

தரவரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள வீரர்களுக்கு எதிராக இந்த ஆண்டில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள டோல்கோபோலோவ், 7-ல் வெற்றி கண்டுள்ளார். அவர் தனது காலிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார். பெர்டிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார். 

மற்றொரு காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், கனடாவின் மிலஸ் ரயோனிச்சும் மோதவுள்ளனர். நடால் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியையும், ரயோனிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கரையும் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினர

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்