முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். சமாதியை சேதப்படுத்த முயன்ற வாலிபர் கைது

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.25 - சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியை சேதப்படுத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-
சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பல்கலைக்கழகம் எதிரே அருகருகே எம்.ஜி.ஆர். சமாதியும், அண்ணா சமாதியும் உள்ளது. அருகிலேயே அண்ணா சதுக்கம் காவல் நிலையமும் உள்ளது. சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கும் முக்கிய இடங்களில் மெரினா கடற்கரையும், அண்ணா சமாதியும், எம்.ஜி.ஆர். சமாதியும் அடங்கும். அதிலும் கிராமத்திலிருந்து வருபவர்கள் எம்.ஜி.ஆரை தரிசிப்பது போலவே அவரது சமாதியை தரிசிக்க வருவார்கள்.
இதனால் எந்த நேரமும் எம்.ஜி.ஆர். சமாதி ஆட்கள் நடமாட்டத்துடன் பரபரப்புடன் இருக்கும். இந்நிலையில் நேற்று எம்.ஜி.ஆர். சமாதிக்கு வந்த வாலிபர் ஒருவர் எம்.ஜி.ஆர். சமாதியின் மேல் உள்ள கல்லை பெயர்த்தெடுக்க முயற்சித்துள்ளார். இதில் அந்த கல் சிறிது நகர்ந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியுற்ற அங்கு வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரை விசாரித்தபோது, தனது பெயர் ராமச்சந்திரன்(25) என்றும், தான் திருத்தணியை சேர்ந்தவன் என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிறந்ததால் தனக்கு ராமச்சந்திரன் என்று தனது தந்தை பெயர் வைத்ததாக கூறியுள்ளார். பிறகு திடீரென்று நான் தான் எம்.ஜி.ஆர்., எனக்கு எதற்கு சமாதி, அதனால் அதை உடைக்க போனேன் என்று கூறியுள்ளார். பிறகு வீட்டிலிருந்து வரும்போது கைகடிகாரம் கட்டாமல் வந்து விட்டேன். எம்.ஜி.ஆர். சமாதிக்குள்தான் கைகடிகாரம் உள்ளதே, அதை எடுக்கலாம் என்று சமாதியை பெயர்க்க முயன்றேன் என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சு மனநிலை சரியில்லாதவர் போல் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவரை பிரிவு 23(3)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்