முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாயக்கழிவு நீரை வெளியேற்றக் கூடாது: விவகாயிகள் கோரிக்கை

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பூர்,ஜூன்.1 - நொய்யலில் ஒரு துளி கூட சாயக் கழிவு நீரை வெளியேற்றக் கூடாது என்று தொழில் துறை அமைச்சர் சண்முகவேலுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர். நொய்யல் சாயக் கழிவு நீர் பிரச்சினையில் சென்னை ஐகோர்ட் உத்தரவை அடுத்து கடந்த ஜனவரி 28 ம் தேதி முதல் திருப்பூரில் உள்ள அனைத்து சாய கலவை ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் திருப்பூரில் உள்ள ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டு பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் முன்னிலையில் விவசாயிகள் மற்றும் தொழில் துறையினருடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

முதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்புடன் அமைச்சர் வேலு பேச்சு நடத்தினார். அதில் நொய்யல் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி, ஒரத்துபாளையம் அமை மாசு நிரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் குழந்தைசாமி ஆகியோரது தலைமையில் சுமார் 10 விவசாயிகள் கலந்து கொண்டனர். 

நொய்யலில் சாய கழிவு நீர் ஒரு துளி கூட வெளியேறக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விவசாயிகளிடம் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதை அரசிடம் விவசாயிகள் தெரிவித்தனர். 14 ஆண்டுகளாக சாய கழிவு நீரால் பாதிக்கப்பட்டு அழிந்து விவசாயிகளை பாதுகாக்க அரசு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக நொய்யல் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி தெரிவித்தார். அடுத்து தொழில் துறையினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சாய கழிவு நீரை ஜீரோ டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்பது விஞ்ஞானபூர்வ உண்மை. ஆகவே சுத்திகரிக்கப்பட்ட சாய கழிவு நீரை குழாய் வழியாக கடலுக்கு கொண்டு செல்வதே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அத்திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தினர்.

இப்பிரச்சினையில் சிறந்த வழியை அரசு ஆராய்ந்து சாய ஆலைகளை மீண்டும் இயக்குவதற்கான வழிவகைகளை செய்து தர வேண்டும் என்றும் தொழில் துறையினர் வலியுறுத்தினர். விவசாயிகள், தொழில்துறையினரின் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட அமைச்சர் சண்முகவேலு இப்பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்