முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றச்சாட்டு ஏற்பு: முஷாரப்புக்கு மரண தண்டனை கிடைக்குமா?

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஏப்.2 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.

1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார்.

அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபையில் தங்கி இருந்தார். ஏறக்குறைய தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டார் முஷாரப். எனினும், பதவி ஆசை அவரை விடவில்லை. கடந்த ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் அங்கு தேர்தலில் நிற்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பாய்ந்தன.

இந்நிலையில், இதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். தன்னுடைய நோயைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தார். மார்ச் 31-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் கட்டாயமாக ஆஜராக வேண்டும், இல்லையெனில் ஜாமீன் இல்லாத கைதுக்கு ஆளாக நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது முஷாரப் ஆஜரானார்.

இந்த வழக்கில் இதுவரை 35 முறை வாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் முஷாரப் ஒரே ஒரு முறை மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்.

இதனிடையே துபாயில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தன் தாயைக் காண்பதற்கு முஷாரப் அனுமதி கேட்டிருந்தார். முஷாரப் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

முஷாரபின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், அவரை வெளிநாடு செல்ல அனுமதிப்பதா வேண்டாமா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து விட்டது.

நான் என் நாட்டின் நலனுக்காகத்தான் செய்தேன். ஆனால் என்னைக் கொடுங் கோலன் என்று சொல்வதைக் கேட்டு நான் வருந்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார் பர்வேஸ் முஷாரப்.

மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க அளவுக்கு அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். அல்லது குறைந்தபட்சம் தன் ஆயுள்காலம் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க நேரிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்