முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி பஸ்டே கொண்டாட அனுமதியில்லை - கமிஷனர் ராஜேந்திரன்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.25 - சென்னையில் இனி பஸ்டே கொண்டாட அனுமதியில்லை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். பஸ்டே கொண்டாட்டத்தையொட்டி ஏற்பட்ட மோதலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 300 பேர் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விபரம் வருமாறு:-
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் எழும்பூர் வடக்கு ரயில் நிலையம் அருகே இரண்டு மாநகர பேரூந்துகளை சிறைப்பிடித்து பஸ்டே கொண்டாடினார்கள். பஸ்ஸின் மேற்கூரையில் ஏறிகொண்டும், பஸ்ஸின் முன்புறம் டான்ஸ் ஆடிகொண்டும், பட்டாசுகளை கொளுத்தி போட்டு கொண்டும் போக்குவரத்திற்கு இடையூறு செய்து  கொண்டு சென்றனர்.
இதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் ஐகோர்ட் பஸ்டே கொண்டாடும் மாணவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கமிஷனர் ராஜேந்திரனை வறுத்தெடுத்தது. அதற்கு முன்பு வரை பஸ்டே  பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அதெல்லாம் ஒன்றுமில்லை. அதெல்லாம் ஒருவகை கலாச்சாரம் 20, 30 ஆண்டுகளாக  உள்ளது. அதை படிபடியாகதான் குறைக்க முடியும் என்று கமிஷனர் சமாதானம் பேசினார். அதன் விளைவு மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டம் யாரையும் மதிக்காமல் பொதுமக்களை தொல்லைபடுத்தும் அளவில் சென்றது, காவல் துறை அதிகாரிகளும் கமிஷனரே கலாச்சாரம் என்று கூறிவிட்டாரே நமக்கென்ன என்று இந்த பிரச்சனையில் மெத்தனம் காட்டியதன் விளைவு கோர்ட் கூப்பிட்டு கண்டிக்கும் அளவு சென்றுவிட்டது.
தும்பைவிட்டு வாலை பிடித்த கதையாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அத்து மீறலை கண்டிக்கும் விதமாக போலீசார் அவர்களிடம் அத்துமீறி கல்லூரிக்குள் சென்று தடியடி நடத்தும் அளவு முக்கியமான பிரச்சனையாக மாறிப்போனது.
தற்போது இந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. வச்சா குடுமி, அடித்தால் மொட்டை என்பது போல்விட்டால் சும்மா விட்டுவிடுவோம் கோர்ட் கண்டித்தவுடன் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் இறங்கி உள்ளது பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் விதமாக அமையும்.
மேலும் நேற்று பேட்டியளித்த கமிஷனர் ராஜேந்திரன் இனி பஸ்டே கொண்டாடினால் கடும் நடவடிக்கை என்று கூறினார். அப்படி  கமிஷனர் கூறும்போதே ராதா கிருஷ்ணன் நெடுச்சாலையில் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பஸ்ஸை சிறைபிடித்து கூரையின் மேல் ஏறிக்கொண்டு ரோட்டில் நடனமாடி கொண்டும் சென்றனர். அவர்கள்  பின்னால் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றது, போலீசார் எதுவும் செய்ய முடியாமல் கூடவே கல்லூரி வரை  பாதுகாப்பாக சென்றனர்.  
இதனிடையே நேற்று மாலை கல்லூரி முதல்வர்கள் சிலரை அழைத்து கமிஷனர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்