முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம்- 3வது குற்றப்பத்திரிக்கை அடுத்த வாரம் தாக்கல்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.1 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு ஊழல் தொடர்பாக 3 வது குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டது. அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் இவர்களில் சிலர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டை அணுகி உள்ளனர். இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் எப்படி கைமாறியது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சி.பி.ஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மொரீசியஸ் தீவில் உள்ள சில வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சமீபத்தில் சி.பி.ஐ. அமலாக்க பிரிவை சேர்ந்த 4 அதிகாரிகள் மொரீசியஸ் தீவுக்கு சென்று விசாரித்தனர். அவர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் கொடுத்து உதவ வேண்டும் என்று மொரீசியஸ் சுப்ரீம் கோர்ட் அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ள மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. 3 வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. 

அனேகமாக அடுத்த வாரம் 3 வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் பெயர்கள் மற்றும் இடைத் தரகர்களின் பெயர்கள் இடம்பெற உள்ளது. இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சிங்கப்பூர், சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் சி.பி.ஐ. குழுவினர் சென்று விசாரணை நடத்தவும் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. வரும் ஜூலை மாதம் 6 ம் தேதி தனி அறிக்கை ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்