முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பை: வலியை மறக்காத யுவராஜ் சிங்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஏப்.19 - டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால் ஏற்பட்ட வலியை இன்னும் மறக்க முடியவில்லை என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். 

அந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் முக்கியமான கட்டத்தில் மிகவும் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. உலகக் கோப்பையும் கைநழுவியது. இப்போட்டியில் இந்தியா தோல்வியடைய யுவராஜ் சிங்கின் மோசமான ஆட்டமே காரணம் என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. அவரது வீட்டையும் ரசிகர்கள் கல் வீசித் தாக்கினர். 

இப்போது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள யுவராஜ் சிங்கின் பேட்டி அணியின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. 

அதில் அவர் கூறியிருப்பது: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது என்பது ஈடு செய்ய முடியாத இழப்புதான். அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். 

எனினும் ஒரு விளையாட்டு வீரர் இதுபோன்ற உணர்ச்சிகளில் இருந்து வேகமாக வெளியே வந்து, அடுத்த சவாலை சந்திக்க தயாராக வேண்டும். அந்த தோல்வியில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். எனினும் அந்த தோல்வி தந்த ஏமாற்றத்தில் இருந்து மீள்வது கடினமாகவே உள்ளது. வெற்றியையும், தோல்வியையும் ஒன்றுபோலவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிய வயதில் எனது பயிற்சியாளர்களில் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் வெற்றியின்போதும், தோல்வியின்போதும் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதுபோலவே செயல்பட்டு வந்துள்ளேன். ஒருவருக்கு நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் மாறிமாறி நடப்பது வாழ்க்கையில் சகஜமானதுதான். 

இப்போது ஐபிஎல் போட்டி தொடங்கிவிட்டது. இந்த போட்டி எனக்கு நிச்சயமாகவே மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறப்பாக பயிற்சி எடுத்துள்ளதுடன், வெற்றிக்காக புதிய திட்டங்களையும் வகுத்துள்ளோம். எங்கள் அணியில் மூத்த வீரர்களும், இளம் வீரர்களும் சம அளவில் இருக்கிறோம். 

கிறிஸ் கெயில், முத்தையா முரளிதரன், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் வெட்டோரி, ஆலன் டோனால்ட் ஆகியோருடன் வீரர்களுக்கான அறையை பகிர்ந்து கொண்டுள்ளது சிறப்பான விஷயம். இந்த போட்டியில் எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்