முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியது பருவமழை

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கிருஷ்ணகிரி,ஜூன்.3 - கேரளாவில் 3 நாட்களுக்கு முன்பே தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக அம்மாநிலத்தின் குமாரகத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக 3 நாட்களுக்கு முன்பே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தையொட்டியுள்ள தமிழக பகுதிகளான தென்காசி, குற்றாலம், மேக்கரை, செங்கோட்டை, புளியரை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றும் சாரல் மழையும் பெய்தது. 

கேரளாவில் பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் எல்லையையொட்டி உள்ள கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேரளாவில் அதிகபட்சமாக குமாரகத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செர்தாலையில் 2 சென்டி மீட்டரும், இருஞ்சாலகுடாவில் 11 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மானாவாரி பயிர்களுக்கு இம்மழை உதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சுற்றியுள்ள அண்ணாமலை நகர், கீரப்பாளையம், மேலவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேலூர் மாவட்டத்தின் காட்பாடி, குடியாத்தம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் கத்தரி வெப்பத்தில் இருந்து தப்பி சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony