முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஆர்ஜிதம் செய்யக்கூடாது ​​- ராஜ்நாத்சிங்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூன் 4 - நில ஆர்ஜிதம் தொடர்பாக மத்திய அரசின் புதிய கொள்கை அறிவிக்கப்படும்வரை உத்தரபிரதேசம் உள்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நில ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.  உத்தரபிரதேசத்தில் நில ஆர்ஜிதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சமீபத்தில் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின்போது 2 போலீஸ்காரர்கள் உள்பட சிலர் பலியானார்கள். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் கலக்கமடைந்த உ.பி.முதல்வர் மாயாவதி, உ.பி. விவசாயிகளை நேரில் அழைத்து பேச்சுநடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய முதல்வர் மாயாவதி, நில ஆர்ஜித விஷயத்தில் உ.பி. அரசு இனி நேரடியாக தலையிடாது என்றும், ஒரு உதவியாளராகவே அரசு செயல்படும் என்றும் கூறினார். இந்த நிலையில் லக்னோவில் பா.ஜ.க.மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத்சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  நில ஆர்ஜிதம் தொடர்பாக மாயாவதி அறிவித்துள்ள கொள்கை குறித்து கருத்து கேட்டதற்கு அதற்கு பதில்சொல்ல அவர் மறுத்துவிட்டார். ஆனால் மத்திய அரசு இதுதொடர்பாக ஒரு புதிய கொள்கை முடிவை அறிவிக்கும்வரை உ.பி. உள்பட எந்த மாநிலத்திலும் நில ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் புதிய கொள்கை சட்டமாக்கப்பட்ட பிறகே நில ஆர்ஜிதங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். 

மாயாவதி தனது சொந்த கொள்கையை ஏன் அவசரப்பட்டு அறிவிக்கவேண்டும்? இத்தகைய அவசரம் பல சந்தேகங்களை கிளப்புகிறது என்றும் ராஜ்நாத் கூறினார்.   விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நில ஆர்ஜிதங்களை செய்யக்கூடாது. ஆனால் உ.பி. அரசு விதிமுறைகளை மீறி இந்த விஷயத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். லக்னோவில் நடந்துவரும் பா.ஜ.க.தேசிய நிர்வாகிகள் மாநாட்டின்போது ராஜ்நாத்சிங் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மேற்கண்ட விபரங்களை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony