முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் தலைமையில் சிறப்பான நிர்வாகத்தை தர முடியும் - கவர்னர்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 4 - மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆற்றல்வாய்ந்த தலைமையில் சிறப்பான நிர்வாகத்தை வழங்க முடியும் என்று கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா அறிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் கவர்னர் தமது உரையில் பேசியதாவது:-

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த அரசு தனி கவனம் செலுத்தும். திறன்வளர் பயிற்சி, தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் மூலம் வளர்ந்து வரும் தொலைத் தொடர்புத் துறை போன்றவற்றில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஆதி திராவிட மாணவர்களின் திறன் மேம்பட அவர்கள்  விடுதிகளில் தங்கிப் பயிலும்போது சிறப்பான சூழ்நிலைகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். இந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகளின் வசதியை ஓராண்டிற்குள் மேம்படுத்த சிறப்பு நிதி உதவியை அளிக்கும்.

இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திலேயே கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த முகாம்களில் தரமான இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும். இலங்கைப் போரினால் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மாண்டு போன நிலையில் மீதமுள்ள இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் சொந்தப் பகுதிகளிலேயே மறுவாழ்வு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துமாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக் கொள்கிறது.

இந்த அரசின் கொள்கைகளையும் முன்னுரிமைகளையும் இங்கு சுட்டிக் காட்டியுள்ளேன். மகத்தான வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள இந்த அரசிடமிருந்து பொதுமக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆற்றல் வாய்ந்த தலைமையால் ஒரு சிறப்பான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

இம்மாமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் மக்களாட்சியின் மாண்புகளைக் கட்டிக் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக அமைந்து மக்களின் நலனை மேம்படுத்தக் கூடிய நல்ல பல கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony