முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.4 - புதுவை மாநில சட்டசபைக்கான தேர்தல் முடிவு கடந்த 13-ந் தேதி வெளியானது. இதில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் என 20 தொகுதிகளை கைப்பற்றியது. 

காங்கிரஸ் 7 இடங்களிலும், தி.மு.க. 2 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். புதுவையில் ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ.க்களின் பலம் இருந்தால் போதுமானதாகும். இதனால் காரைக்கால் நிரவி திருப்பட்டனத்தில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் உரிமையை ரங்கசாமி கவர்னரிடம் கோரினார். 

இதற்கு கவர்னர் இக்பால்சிங் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து கடந்த 16-ந் தேதி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார். அமைச்சரவை விரிவாக்கம், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல், சட்டமன்ற கூட்டம் ஆகியவை நடைபெறாமல் தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் தற்காலிக சபாநாயகராக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தியாகராஜன் நியமிக்கப்பட்டார். இவர் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் இக்பால்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வசதியாக புதுவை சட்டசபை 3-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று பிற்பகல் 1.05 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூடியது. 

தற்காலிக சபாநாயகர் தியாகராஜன் திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்றனர். 

எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் தியாகராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். 

அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் சந்திரகாசு, சுயேட்சை உறுப்பினர் வி.எம்.சி.சிவக்குமார், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அங்காளன், காங்கிரஸ் உறுப்பினர்கள் தேனீ.ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ராஜவேலு, காங்கிரஸ் உறுப்பினர் வல்சராஜ், அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், என்.ஆர்.காங்கிரஸ் அசோக் ஆனந்த், அ.தி.முக. உறுப்பினர் பாஸ்கர், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், கார்த்திகேயன், தி.மு.க. நந்தா சரவணன், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் நேரு என்ற குப்புசாமி, பன்னீர்செல்வம், அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஓம்சக்தி சேகர், பெரியசாமி, புருசோத்தமன், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாபதி என்ற கோதண்டராமன், செல்வம், பி.ஆர்.சிவா, காங்கிரஸ் திருமுருகன், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்